மாங்கல்ய தோஷம் போக்கும் திருமங்கலக்குடி(அதிசய புருஷாமிருகமும் உண்டு)
திருமங்கலக்குடி என்ற ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை போகும் வழியில் திருப்பனந்தாளுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வூர் உள்ளது.
இவ் ஊரில் அம்பாளின் பெயரால் வழங்கும் கோவில் மங்கலேஸ்வரி பிராண நாகேஸ்வரர் கோவில் ஆகும். மங்களேஸ்வரி தன் வலது கையில் மங்கலநாணுடன் காட்சி தருகின்றாள். தேவாரத் திருத்தலங்கள் 275இல் காவிரி வட கரையில் இருக்கும் 38 வது திருத்தலம் ஆகும்.
இக்கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல அம்மனின் பெயரால் அழைக்கப்படுகின்றது. இங்கு மங்களாம்பிகை அம்மனே வரப்பிரசாதியாக அருள்கின்றாள். அவள் கையில் இருக்கும் திருமாங்கல்ய கயிறு பெண்களின் மாங்கல்ய தோஷம் போக்க வல்லது.
பஞ்ச மங்கல சேத்திரம்
மங்கலாம்பிகை எழுந்தருளியிருக்கும் இத்தலம் மங்கல திருத்தலம் ஆகும் . இங்கு ஐந்து மங்களகரமான விஷயங்கள் உண்டு. 1.மங்களேஸ்வரர் 2.மங்களேஸ்வரி 3. மங்கள விநாயகர் 4.மங்கள விமானம் 5. மங்கள தீர்த்தம் ஆகும். இதனால் இச்சேத்திரம் பஞ்சமங்கல சேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது.
மூலஸ்தானம்
திருமங்கலக்குடி பிராண நாதஸ்வரர் கோவிலின் மூலஸ்தானத்தில் காணப்படும் லிங்கம் சுயம்புலிங்கம் ஆகும். இதன் லிங்க பாணம் ஆவுடையை விட மிக உயரமாகக் காணப்படுகின்றது. வேறு தலங்களில் இவ்வாறான உயரமான லிங்க பானத்தை காண்பது அரிது. இங்கு அகத்தியர் சிவலிங்க பூஜை செய்தபோது லிங்கத்தின் உச்சியில் பூவை வைப்பதற்கு எட்டிக் குதித்து வைத்தார் என்று கூறுகின்றனர். அகத்தியர் குள்ள முனிவர் என்பதால் அவருக்கு லிங்கத்தின் உயரம் எட்டவில்லை.
மூலஸ்தானத்தில் இரண்டு புறமும் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பெண் தெய்வங்கள் உள்ளன. துவாரக பாலகி என்று இன்றைக்கு அழைக்கப்படும் இப்பெண் தெய்வங்களை மகாலட்சுமி என்றும் சரஸ்வதி என்றும் குறிப்பிடுகின்றனர். இவர்களில் சரஸ்வதி கையில் வீணை எதுவும் இல்லை. இவ்விரு தெய்வங்களும் (இக்கோயில் முன்பு பௌத்த கோயிலாகி இருந்ததை உறுதி செய்கின்றன. மேலும் கருவறையில் உள்ள உயரமான லிங்க பாணமும் அது இந்திரனின் 'கந்துடைப் பொதியில்' என்பதைச் சுட்டுகின்றன)
உப சன்னதிகள்
மங்களாம்பிகை பிராண நாகேஸ்வரர் கோயிலில் இரண்டு நடராஜர்களும் சிவகாமியும் காணப்படுகின்றனர். அதில் ஒரு நடராஜரின் காலுக்கு அடியில் அசுரனின் வதைபட்ட உருவம் காணப்படுகின்றது. இங்கு நவக்கிரகத்திற்குத் சனி சன்னதி உண்டு. தனிக் கதையும் உள்ளது. இங்கு மான் மழு ஆயுதங்களை ஏந்திய சிவ துர்க்கை காணப்படுகின்றது.
பொதுவாக சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணு துர்க்கையை சிவன் சன்னதியின் கோஷ்டத்தில் காணலாம். ஆனால் இத்தலத்தில் சிவதுர்க்கையைக் கண்டு தரிசிக்கலாம். அவள் காலடியில் மகிஷாசுரன் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு அருகில் காவேரி அம்மனும் தெய்வமாக காணப்படுகின்றாள் ஆடிப்பெருக்கு நாளன்று காவேரி அம்மனுக்கு சிறப்புப் பூசைகள் நடைபெறும். புருஷா மிருகத்தை இங்குக் காணலாம்.
மரகதலிங்கம்மங்களாம்பிகை பிராண நாகேஸ்வரர் கோயிலில் மரகதலிங்கம் உள்ளது. இம் மரகதலிங்கத்திற்கு உச்சிக்கால பூசை மட்டும் தினந்தோறும் நடைபெறும். அப்போது வலம்புரி சங்கினால் பால், பன்னீர், தேன், சந்தனம் போன்றவற்றை அபிஷேகம் செய்கின்றனர்.
விருட்சமும் தீர்த்தமும் மங்களாம்பிகை பிராணநாதர் கோயிலுக்கு கோங்குமரமும் வெள்ளருக்கும் தலவிருட்சமங்கள் ஆகும். வெள் எருக்கு என்பது சிவபெருமானுக்கு உரியது. 'வெள் எருக்கஞ்சடை முடியுயோன் வெற்பெடுத்த திருமேனி' என்று கம்பராமாயணத்தில் இராவணனை கம்பர் குறிப்பிடுகின்றார். எருக்க இலையில் தயிர் சாதம் வழங்குவது இங்குப் பிரசாதமாக கருதப்படுகின்றது.
தீர்த்தங்கள்
மற்ற பல சிவன் கோவில்களில் இருப்பதை போலவே இங்கும் சூரிய சந்திர தீர்த்தங்கள் உள்ளன. சூரியனும் சந்திரனும் இறைவனின் இரண்டு கண்களாக இருப்பதனால் இறைவனைக் குளிர்விக்க இவ்விரு தீர்த்தங்களும் இங்கு இருப்பதாக ஸ்தல புராணக் கதை கூறுகின்றது.
ஒளி வழிபாட்டின் தொடர்ச்சியாக பௌத்தர்கள் சூரிய சந்திர வழிபாட்டை வலியுறுத்தி வந்தனர். அவர்களின் மடாலயங்களில் வெட்டிய குளத்துக்கு சூரிய சந்திரன் பிரமன் இந்திரன் பெயர்களைச் சூட்டினர். இரண்டும் மங்களநாதர் மங்களாம்பிகை கோவிலிலும் சூரிய சந்திர தீர்த்தங்கள் உள்ளன.
சிவன் கோவில்கள் புதிதாக உருவான இடங்களில் அவ் இடங்களை மகிமைப்படுத்த புதிய ஸ்தல புராணக் கதைகளைத் தோற்றுவித்தனர். அவ்வாறு உருவாக்கிய கதைகளில் இரண்டு கதைகள் இனி வருமாறு.
கதை 1
உடலும் உயிரும் ஒட்டிய கதை
சோழ மன்னர் காலத்தில் அவரது அமைச்சர் ஒருவர் மக்களிடம் இருந்து வசூலித்த வரிப்பணத்தை மன்னரிடம் சேர்ப்பிக்காமல் அப்பணத்தைக் கொண்டு தான் இக்கோயிலை கட்டினார். அரிமரத்ன பாண்டியனின் அமைச்சரும் (மாணிக்கவாசகர்) மன்னன் குதிரை வாங்க கொடுத்த பணத்தில் கோயில் கட்டிய கதை திருவிளையாடல் புராணத்திலும் சற்று வேறுபட்ட வடிவில் காணப்படுகின்றது.
திருமங்கலக்குடி கதையில் அமைச்சர் மக்கள் வரிப்பணத்தை மன்னரிடம் செலுத்தாத காரணத்தினால் அம் மன்னன் தன் அமைச்சரை சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டான். சிரச்சேதம் என்றால் சிரத்தை (தலையை) வெட்டிக் கொலை தண்டனையை நிறைவேற்றுவதாகும்.
அமைச்சர் தனக்கு இட்ட தண்டனையை கேட்டறிந்த சிவபெருமானை வணங்கி என் தலையை வெட்டிய பிறகு என் உடலைத் தான் கோவில் கட்டி இருக்கும் ஊரிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றார். கொலைத் தண்டனையை நிறைவேற்றிய பிறகு அவர் உடம்பையும் முண்டத்தையும் அவருடைய சொந்த ஊருக்கு அடக்கம் செய்வதற்காக கொண்டு வந்தனர்.
தண்டனை அறிவிக்கப்பட்டதும் அமைச்சரின் மனைவி அவர் கட்டிய சிவபெருமான் கோவிலுக்குச் சென்று அழுது தனக்கு மாங்கல்யப் பிச்சை வழங்கும்படி அங்கிருந்த அம்பாளிடம் வேண்டினாள் அம்பாளும் அவளுடைய கண்ணீருக்கு இரங்கி அவளுடைய மாங்கல்ய தோஷத்தை நீக்கி மாங்கல்ய பாக்கியத்தை அருளினாள்.
அமைச்சரின் உடல் ஊருக்குள் கொண்டு வரப்பட்டதும் தலையும் உடலும் ஒட்டிக்கொண்டதால் உடல் உயிர் பெற்றது. அவரும் அவர் மனைவியும் நீண்ட காலம் சீரும் சிறப்புமாக பேரும் புகழுமாக வாழ்ந்தனர். இக்கதை இங்கு எழுந்தருளியிருக்கும் மங்களாம்பிகை மாங்கல்ய தோஷத்தை நீக்குபவள். பெண்களுக்கு தீர்க்கசுமங்லி யோகமும் ஆண்களுக்கு தீர்க்காயுசும் வழங்குவாள் என்பதை உறுதி செய்கிறது.
கதை 2
நவக்கிரகங்களுக்கு நோய் நீங்கியது
ஒரு சமயம் காலமா முனிவருக்கு நோய் தாக்கி அவதிப்படும் நிலை ஏற்பட்டது. அப்போது நவக்கிரகங்கள் அவருக்கு நோய் ஏற்படாமல் அந்த நோயைத் தடுக்க முன்வந்தன. இது முற்றிலும் வியப்பான ஒரு சூழ்நிலையாகும். அவரது விதிப்படி அவர் நோயாளியாக ஆகி அவதிப்படும் துயரத்தை அவர் அனுபவிக்க விடாமல் தடுக்க நவக்கிரகங்கள் முன் வந்ததால் பிரம்ம தேவனுக்கு கோபம் வந்தது. பிரம்மதேவன் சினம் கொண்டு காலமாமுனிவரை காப்பாற்ற நீங்கள் முன்வந்தால் அவருக்கு வரக்கூடிய நோய் உங்களுக்கு வந்து விடும் என்று நவக்கிரகங்களைச்சபித்து விட்டார். இப்போது நவக்கிரகங்கள் நோயினால் அவதிப்படலாயின.
பிரம்மன் கொடுத்த சாபத்தை சிவபெருமானால் மட்டுமே நீக்க முடியும் என்று எண்ணிய, முடிவு செய்த ஒன்பது கிரகங்களும் இத்திருத்தலத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தன. இவர்களின் தவத்தைக் கண்டு மெச்சிய சிவபெருமான் ஒரு நாள் இவர்களுக்குக் காட்சி கொடுத்து இவர்களின் நோயை நீக்கினார். நோயின் துன்பத்தை அறவே அகற்றினார். சாபம் நீங்கிய ஒன்பது கிரகங்களும் இங்கேயே தங்கி சிவபெருமானை பூஜித்து வருகின்றன. இங்கு நவக்கிரகத்திற்கு தனி சன்னதி உண்டு.
தயிர்சாதப் பிரசாதம்
பிராண நாதஸ்வரர் மங்களாம்பிகை கோவிலில் குழந்தை இல்லாதவர்கள் வந்து நவக்கிரக தோஷத்தை கழித்து எருக்க இலையில் தயிர் சாதம் படைத்து பின்பு அதனைப் பிரசாதமாக வழங்குகின்றனர்.
இவ்வாறு 11 ஞாயிற்றுக்கிழமைகள் உச்சிப் பொழுதில் 12 முதல் 12 அரை மணிக்குள் தயிர்சாத பூஜை செய்து பிரசாதமாக வழங்கி வந்தால் திருமணத் தடை விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். செவ்வாய் தோஷம், நாக தோஷம் என நவக்கிரக தோஷம் எதுவாக இருந்தாலும் விலகும். தயிர்சாத பிரசாத முறை இக்கோவிலில் மட்டுமே காணக்கூடிய ஒரு தனிச்சிறப்பாகும்.
விழாக்கள்
பிராண நாதஸ்வரர் மங்களாம்பிகை கோவிலில் மற்ற சிவன் கோவில்களில் நடப்பது போல பங்குனி மாதத்தில் திருக்கல்யாணமும் பத்து நாள் திருவிழாவும் நடைபெறும். ஆனால் இங்கு சற்று வினோதமாக சிவனுக்கும் பார்வதிக்கும் இரவில் திருக்கல்யாணம் நடக்கும். திருமண விருந்து மதியம் நடைபெறும்.
(இதுவும் இக்கோயில் முன்பு இந்திரன் கோவிலாக இருந்ததை உறுதி செய்கிறது. அப்போது பங்குனி உத்திரம் முதல் சித்ரா பௌர்ணமி வரை இந்திர விழா நடந்தது. இந்நாட்களில் ஆணும் பெண்ணும் நீர் நிலைகளுக்கு அருகில் கூடிமகிழ்ந்து ஆடிப் பாடி களித்தனர் என்பதை சிலம்பும் மேகலையும் செப்புகிறது. பங்குனி உத்திரம் காமன் பண்டிகையாக தொடர்ந்தது. காமன் விழா காமதகனமாக சைவத்தில் மாற்றம் பெற்றது.
புருஷா மிருகம்
மங்களாம்பிகை பிராண நாகேஸ்வரர் கோவிலில் குருஷா மிருகம் காணப்படுகின்றது. புருஷா மிருகம் அதிகமான கோவில்களில் காணப்படுவதில்லை.திருமழபாடியில் உள்ளது. திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் ஏரிக்குள் புருஷா மிருகம் இருப்பதை காணலாம்.
சில கோவில்களில் புருஷா மிருகம் வாகனமாக சிவபெருமானுக்கு வீதி வலம் வரும்போது பயன்படுத்தப்படுகின்றது.சாமிக்கு காட்டும் தீபாராதனைகளில் புருஷா மிருக தீபமும் ஒன்றாகும்.
கரி பூசும் சடங்கு
புருஷா மிருகம் என்பது மனித முகமும் சிங்க உடலும் இரு பக்கமும் சிறகுகளும் கொண்டதாகும். இவன் குபேரனுக்கு காவலனாக இருந்தவன் என்று நம்பப்படுகின்றது. திருவாதவூரில் புருஷா மிருகம் சிலை நிறுவப்பட்டுள்ள ஏரியைப் புருஷாமிருக தீர்த்தம் என்பர். இதனை ஏரி காவல் தெய்வமாக அவ்வூரில் கருதுகின்றனர். மழை இல்லாத பஞ்சகாலத்தில் தேங்காயைசிஜ் சுட்டு எரித்து கருக்கி அதன் கரித் தூளைப் புருஷா மிருகத்தின் மீது பூசுவது மழைச்சடங்குகளில் ஒன்றாகும்.
கதை 1
பீமனின் ஓட்டம்
புருஷா மிருகத்திற்கும் ஒரு புராணக்கதை வழங்குகின்றது. பாண்டவர்கள் ராஜசூயயாகம் தொடங்கிய போது கண்ண பரமாத்மா பீமனிடம். புருஷா மிருகம் வந்தால் ராஜசூய யாகம் சிறப்பாக நடந்தேறும் என்ற காரணத்தினால் அதனை அழைத்து வரும்படி கூறினார். பீமன் போய் புருஷா மிருகத்தை அழைத்தான்.
புருஷாமிருகம் பீமனிடம் 'யாகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக நான் வருகிறேன். ஆனால் நான் எப்பொழுதும் முப்பொழுதும் சிவ தியானத்தில் இருப்பவன். நான் விரைவாக ஓடுவேன். எனக்கு முன்பாக நீ வழி காட்டிக் கொண்டே ஓட வேண்டும்.வழியில் எனக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது ஏற்பட்டால் என்னுடைய சிவ தியானம் தடைபடும்' என்றது. சரி என்று சம்மதித்து பீமன் முன்னே ஓடத் தொடங்கினான். வழியை சீர்படுத்திக் கொண்டே அவன் விரைவாக ஓட புருஷா மிருகம் அவனைவிட விரைவாக அவன் பின்னே ஓடி வந்தது.
ஒரு கட்டத்தில் புருஷாமிருகத்துக்கு ஈடு கொடுத்து பீமனால் ஓட முடியவில்லை. அவன் தன் தரையில் கிடந்த சிறிய கல்லை எடுத்து சிவாய நம என்று சொல்லி பின்னால் எறிந்தான். சிவாய நம என்று சொன்னதால் அந்த கல் சிவலிங்கமாக உருவெடுத்தது. உடனே புருஷா மிருகம் நின்று சிவனைத் தியானித்த பின்பு ஓட தொடங்கியது. இப்போது புருஷா மிருகத்திற்கும் பீமனுக்கும் ஒரு தூரம் ஏற்பட்டதால் பீமன் சற்று நிதானமாகவே ஓடினான்.
மீண்டும் புருஷாமிருகம் தன்னை நெருங்கி விட்டதை அறிந்ததும் அடுத்தடுத்து கற்களை எடுத்து சிவாய நம என்று சொல்லி பின்னால் எறிந்து கொண்டே வந்தான். இவ்வாறு பல இடங்களில் கல்லை எறிந்து அதனுடைய வேகத்தை கட்டுப்படுத்தி தன்னிடத்திற்கு அழைத்து வந்தான். ராஜசூய யாகம் சிறப்பாக நடந்தேறியது. தர்மரும் மற்றவர்களும் கண்ணபரமாத்மாவும் நன்றி சொல்லி அனுப்பி வைத்தனர்.
புருஷா மிருகத்தை பூலோகத்தில் திருவாதவூரில் இருக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக வைம்பாயனர், சௌமியர், ரோமஸர், பிருக்குட்சர், கவுண்டனியர், ஆகிய ரிஷிகளும் கண்ண பரமாத்மாவிடம் அனுமதி கேட்டனர். அவர் சம்மதித்தார். அளித்து அவரும் உடன் வந்து ஆறு பேருமாக புருஷா மிருகத்தை மதுரை திருவாதவூரில் ஏரியில் நிலை நிறுத்தினர்.
12 சிவாலயங்கள்
பீமனுக்குப் பின்னால் புருஷா மிருகம் வேகமாக ஓடி வந்த போது பீமன் பன்னிரெண்டு இடங்களில் கல்லை எடுத்து சிவாய நம என்று சொல்லி பின்னால் எறிந்ததும் புருஷா மிருகம் ஆங்காங்கே நின்று சிவ தியானம் செய்து மீண்டும் ஓடிவந்தது.
அந்தப் பன்னிரு தலங்களும் இன்று கேரளாவில் உள்ளன அவை திருமலை மகாதேவர் ஆலயம், திக்குறிச்சி மகாதேவர் ஆலயம், திற்பரப்பு மகாதேவர் ஆலயம், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலயம், பொன்மனை தீம்பிலாங்குடி ஆலயம் ,திருபன்னிப் பாகம் சிவாலயம், கல்குளம் நீலகண்ட சாமி சிவன் கோவில், மேலாங்கோடு சிவாலயம், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றி கோவில், திரு நட்டாலம் சங்கரநாராயணன் கோவில் ஆகியன.
வழிபாட்டின் பலன்
மங்களாம்பிகை பிராண நாதஸ்வரர் கோவிலில் மாங்கல்ய தோஷம் மட்டுமல்லாது நவ கிரக தோஷங்களும் நீங்கும். முன்னோருக்கு முறையாக தர்ப்பணம் கொடுக்காதவர்கள் இங்கு வந்து தர்ப்பணம் கொடுக்கலாம். இறந்த ஆத்மாக்கள் முக்தி அடையும். திருமங்கலக்குடியில் உள்ள புருஷா மிருகத்தையும் பக்தர்கள் வணங்கி வந்தால் 12 சிவாலயங்களை தரிசித்த புண்ணியத்தைப் பெறலாம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |