வீர யுகத்தின் வேல் வணக்கம் தொடரும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
அறுபடை வீடுகளில் முதல் வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மதுரைக்குத் தென்மேற்கே எட்டுக் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டதால் இத்தலம் திருமணத் திருத்தலமாகும். முருகன் திருமண வைபவம் புடைப்புச் சிற்பமாக உள்ளது.
16ஆம் நூற்றாண்டில் தமிழுக்கு அறிமுகமான கந்த புராணம் இக்கோவிலுக்கு நிறைய புராணக் கதைகளை அளித்துள்ளது.
குகைக்கோவில்:
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலக் குகைக் கோவில் ஆகும்.
குகையே கருவறையாக விளங்குகின்றது. இங்கு ஒரே இடத்தில் தனித் தனியாக முருகன் சிவன் பெருமாள் துர்க்கை விநாயகர் ஆகிய ஐந்து பேருடைய உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. குகையின் வாயிலில் துவார பாலகர்கள் உள்ளனர்.
இந்தக் குகைக் கோவில் தவிர அருகில் அன்னபூரணிக்கு என்று ஒரு குகைக்கோவிலும் ஜேஷ்டா தேவி என்னும் மூதேவிக்கு ஒரு குகைக்கோவிலும் உள்ளது.
கோயில் அமைப்பு:
கருவறைக் குகைக் கோவிலுக்கு முன்பு அர்த்தமண்டபம் உள்ளது அங்கு திருமாலின் அவதாரங்களை குறிக்கும் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவிலின் நுழைவாயிலில் உள்ள பத்துப் பெரிய கல் தூண்களில் நாயக்கர் காலச் சிற்பங்கள் அழகு ஊட்டுகின்றன. இக்கோவிலின் கோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது.
46 மீட்டர் உயரம் உள்ளது. நிறைய சுதைச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. கோவிலைச் சுற்றி: மதுரை திருப்பரங்குன்றம் முருகன்: கோவிலுக்கு வடக்கே சாமிசன்னதி தெருவில் பழைய சொக்கநாதர் கோவில் ஒன்று உள்ளது.
மலையின் மேலே ஏறி போகும்போது நல்ல தண்ணீர் சுனையும் அருகே காசி விஸ்வநாதர் கோவில் என்ற ஒரு சிறிய சன்னதியும் உண்டு. இம்மலைப் பாறையின் தென்பகுதியைத் தென்பரங்குன்றம் என்று அழைப்பார்கள். அங்கு உமை ஆண்டார் குகைக் கோவில் உள்ளது.
மேற்குப் பகுதியில் சமணர் கற்படுகைகள் நிறைய உள்ளன முருகன் கோவிலுக்குப் போகும் முன்பு அருகில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்குப் போய் பக்தர்கள் முதலில் அம்மையப்பரை தரிசித்து விட்டு பின்பு மகனை தரிசிப்பது நலம்.
தேவிலிங்கம்:
இங்கு கோயில் கொண்டுள்ள சிவலிங்கம் அம்பாளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதனால் இதனை தேவி லிங்கம் என்கின்றனர் .இந்த லிங்கத்துக்கு சாந்தகாரம் என்ற மருந்து பூசப்பட்டுள்ளது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது சாம்பிராணி தைலம் மட்டும் பூசி வணங்குகின்றனர். அருகில் வியாச முனியும் பராசர முனியும் உள்ளபர்.
விசேஷ விநாயகர்:
துர்க்கைக்கு இடப்பக்கம் ஒரு விநாயகர் கையில் கரும்பு ஏந்தி தாமரை மலரில் அமர்ந்திருக்கின்றார். இவரைச் சுற்றி முனிவர்கள் வணங்கிய கோலத்தில் நிற்கின்றனர்.
மால்விடைக் கோயில்:
சிவலிங்கத்திற்கு எதிரே உள்ள கருவறையில் பவளக்கனிவாய் பெருமாள் மகாலட்சுமியுடன் சமேதராய் காட்சி தருகின்றார் இவர்களுக்கு அருகில் மதங்கமா முனிவர் நிற்கின்றார். சிவ பெருமானுக்கு எதிரே நந்தி இருக்க வேண்டிய இடத்தில் திருமால் இருப்பதால் திருமாலே நந்தியாக இருக்கின்றார் என்ற பொருளில் மால் விடைக் கோயில் என்று இக்கோவிலை அழைக்கின்றனர்.
கருவறை சிவபெருமாள் திருமயத்தில் இருப்பது போலவே திருப்பரங்குன்றத்திலும் சிவபெருமான் சத்யகிரீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார்.
துர்க்கை:
மகிஷாசுரன் தேவர்களை கொடுமைப்படுத்திய போது பார்வதி தேவி ஒன்பது நாட்கள் அவனுடன் போரிட்டாள். ஒன்பதாம் நாள் மகிஷாசுரவதினியாக வந்து அவனை வதம் செய்தாள். மகிஷாசுரவர்த்தினி இக்கோயிலில் நின்ற காலத்தில் காட்சி தருகின்றாள்.
அவளுக்கு எதிரே கொடி மரமும் ராஜகோபுரமும் உள்ளது மகிஷாசுரமர்த்தினியான பார்வதிக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அந்தத் தோஷம் விலக அவள் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வணங்கினாள்.
சிவபெருமான் தான் பரங்குன்றத்தில் மலை வடிவாகக் காட்சியளிப்பதாகக் கூறி பார்வதியை இங்கு வந்து தவம் செய்தால் அவளுடைய சாபம் தீரும் என்றார். எனவே அம்பாள் இங்கு வந்து தவம் செய்து தன் சாபம் தீர்க்க பெற்றதாக ஒரு கதை அது. அவள் பிரதிஷ்டை செய்த சிவனே சத்யகிரீஸ்வரராக பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
நாக தட்சினாமூர்த்தி:
திருப்பரங்குன்றம் கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி தனிச்சிறப்புடையதாகும் இவர் காலுக்கு கீழே ஒரு நாகம் காணப்படுகின்றது அந்த நாகத்தின் தலையில் இவருடைய இடது கை வைத்து இவர் சன்னதிக்கு முன்பு ருத்ராபிஷேகம் செய்கின்றனர்.
சிவனும் முருகனும் திருப்பரங்குன்றத்தில் முருகனே சிவனாகவும் காட்சி அளிப்பதால் இவரை சோமசுப்பிரமணியர் என்றும் அழைக்கின்றனர். விழா நாயகனாக முருகண் இருந்தாலும் விழா காலங்களில் சிவனுக்குத் தான் கொடியேற்றம் நடைபெறும்.
தைப் பூசம்:
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் தன் மகன் முருகப்பெருமானுக்கு தைப்பூசம் அன்று காட்சியளித்தார் என்பதால் தைப்பூசத்தன்று திருப்பரங்குன்றத்தில் பத்து நாள் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்து.
தைப்பூசம் திருமலை நாயக்கர் பிறந்த நாள் என்பதால் தைப்பூசத்தன்று மதுரையில் தெப்பத் திருவிழாவும் திருப்பரங்குன்றத்தில் பத்து நாள் திருவிழாவும் நடைபெற கட்டளையிட்டார். திருமலை நாயக்கர் காலத்தில் இருந்து இவ்விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
திருமணக் காட்சி:
தேவர்களின் சேனாதிபதியாக முருகன் சூரபத்மனுடன் போரிட்டு அவனை வீழ்த்தி வெற்றி பெற்றதனால் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் மகளான தேவயானையை முருகப்பெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
இந்நிகழ்வு இக்கோவிலுக்குள் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இப்படைப்புச் சிற்பம் மிகவும் விரிவானது. சூரிய சந்திரர் ரத்ன தீபங்களை ஏந்தி நிற்கின்றனர் பார்வதி பரமேஸ்வரன் ஆனந்தமாக நிற்கின்றனர். இந்திரன் தேவயானையை தாரை வார்த்துக் கொடுக்கின்றார்.
பிரம்மன் திருமண யாகம் வளர்க்கின்றார். இத்தகைய காட்சியை இந்த குகைக் கோவிலுக்குள் காணலாம்.
வீரபாகு முதலானோர்:
சூரபத்மனுடன் நடத்தியபோரில் முருகனுக்கு உதவியாக இருந்த சிவபெருமானின் அவதாரமான வீரபாகுவின் வழித்தோன்றல்களான செங்குந்த முதலியார்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சீர் பாதம் தாங்கிகள் ஆக தொன்றுதொட்டு பணி செய்து வருகின்றனர்.
முருகனின் திருக்கோலம்:
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் முருகப்பெருமான் அமர்ந்த காலத்தில் காட்சி தருகின்றார்.அவர் அருகில் நாரதர் இந்திரன் பிரம்மா நின்ற காலத்தில் வீணையில்லாமல் சரஸ்வதி சாவித்திரி மேலே சூரிய சந்திரன் கந்தர் அவர்கள் ஆகியோர் காணப்படுகின்றனர்.முருகனுக்கு கீழே அவரது வாகனமான யானையும் ஆட்டுக் கிடாவும் உள்ளன.
கோவில் வரலாறு:
திருப்பரங்குன்றத்தின் மலையில் குறிஞ்சி நிலக் கடவுளான முருகன் கோயில் 5000 ஆண்டுகளுக்கு எலாக இருந்துள்ளது. அங்கு வேலன் என்னும் சாமியாடி வேல் ஏந்தி முருகனின் அருள் வாக்கு உரைப்பான். இன்றும் வேல் வழிபாடு இங்குத் தொடர்கின்றது.
கிமு.மூன்றாம் நூற்றாண்டில் பௌத்த சமண சமயங்கள் பரவத் தொடங்கிய போது இம்மலை பௌத்த தலமாக விளங்கியது. கௌதம் புத்தரைக் குறிக்கும் யானைமுகக் கடவுள் சிலைகள் நிறைய இங்கு வைக்கப்பட்டன.
தாமரை மலரில் அமர்ந்திருக்கும் யானைமுக கடவுள் அக்காலகட்டத்தில் குறிப்பாக புத்தருக்கு வைக்கப்பட்டது. அப்போது மதுரையைச் சுற்றி அரிட்டாபட்டி போன்ற பல மலைகளில் புத்த மடங்களும் சிலைகளும் இருந்தன.
சமண சமயம் மதுரையில் செல்வாக்குப் பெற்றதும் பௌத்தர்கள் வெளியேறினர். அரிட்டா பட்டி, பிறங்குன்றம்.போன்றவை சமண சமயத் தலங்கள் ஆயின. முருகன் வழிபாடு ஒரு பகுதியில் நடந்தது. குகைகளில் சமணர் பள்ளிகள் இயங்கின.
சமணர் படுக்கைகள்:
மதுரையில் சமணர்கள் பெரும் செல்வாக்குடன் இருந்த காலத்தில் மதுரையைச் சுற்றி உள்ள மலைப்பாறைகளில் சிறு குன்றுகளில் அவர்கள் தான் சுருண்டு படுப்பதற்கான சிறிய பள்ளமாக 3 அடி நீளம் மூன்றடி அகலம் உடைய படுக்கைகளைச் செதுக்கினார்.
அங்கு மாணவர்களுக்கு அவர்கள் இலக்கணம் இலக்கியம் கற்றுத் தந்தனர். எனவே இவ்விடங்கள் சமணப் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன. துறவிகள் உறங்கிய இடமும் பாடம் நடத்திய இடமும் இம் மலைப் பாறைகளை ஆகும்.அவ்வாறு சமணர் பள்ளிகள் ஏராளமாக திருப்பரங்குன்றம் மலை பாறைகளில் உள்ளன.
கழுவேற்றம்:
சமணர் சைவர்களுக்கு இடையே அனல்வாதம் புனல்வாதம் நடைபெற்ற போது சமணர்கள் தோற்கடிக்கப்பட்டு சைவர்கள் வெற்றிவாகை சூடியதால் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். அதன் பிறகு சமணம் மதுரை பகுதியை விட்டு மறைந்து விட்டது. மக்கள் சைவத்திற்கு மாறிவிட்டனர்.
இம்மலையில் இருந்த இருந்த சமணர் பள்ளிகளும் காலி ஆகிவிட்டன. இம்மலை சிவ வழிபாட்டுத் தலமாக செல்வாக்குப் பெறத் தொடங்கியது. குகைகளில் பல வைதிகக் கடவுளரின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன.
16ஆம் நூற்றாண்டில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஸ்கந்த புராணத்துக்கு பின்பு முருகனுக்கு தெய்வயானை மனைவியானாள். நரசிங்கம்பட்டி மலையின் லாடன் கோயிலில் முருகன் நெற்றிப் படடம் கட்டி புது மாப்பிள்ளையாக தெய்வயானையுடன் அமர்ந்திருக்கும் கல்யாணக் கோலம் குகைக்கோவிலில் உள்ளது.
சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் முதலாவதாக சேர்க்கப்பட்டுள்ள காலத்தால் பிற்பட்ட திருமுருகாற்றுப்படை திருப்பரங்குன்றம் முருகனது கோயில் என்றாலும் முருகனை கொற்றவை சிறுவ என்றும் பழையோள் குழவி என்றும் குறிப்பிட்டுள்ளது.
கொற்றவையும் பழையோளும் புராணங்கள் காட்டும் பரவ்தி கிடையாது. சிவபாலனாக முருகன் குறிப்பிடவில்லை. இது தவிர கலித்தொகை மதுரைக்காஞ்சி பரிபாடல் போன்ற பாடல்களிலும் இக்குன்றம் பற்றிய தகவல்கள் உள்ளன.
திருப்பரங்குன்றத்தின் மீது ஆணையிட்டு பேசும் வழக்கம் சங்ககாலத்திலேயே இருந்திருப்பதை அறிகின்றோம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பரங்குன்றம் என்ற இம்மலை வேலன் வெறியாட்டு நிகழ்ந்த முருகனின் மலையாகத் திகழ்கிறது.
இன்று தெய்வயானை திருமணம் புது வரவு என்றாலும் பழைய வேல் வழிபாடு மறையவில்லை. இன்னும் வேலுக்கே தினமும் பலப்பல முறை பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கொரு முறை வேலை மலை மேல் இருக்கும் சுனைக்குப் பக்தர்கள் பின் தொடர கோயிலார் எடுத்துச் செல்கின்றனர்.
மலையின் வேறு பெயர்கள்:
திருப்பரங்குன்றத்தைத் தண்பரங்குன்று, தென்பரங்குன்று பரங்கிரி, திருப்பரங்கிரி, சத்யகிரி, கந்தமாதனம், கந்தமலை என்று பல்வேறு பெயர்களால் இலக்கியங்கள் சுட்டுகின்றன.
திருமணத் திருத்தலம்:
திருப்பரங்குன்றம் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்த திருத்தலம் என்பதால் இங்கு நிறைய திருமண மண்டபங்கள் கோவிலை சுற்றி உள்ளன. பல வகுப்பினர் அவரவர்க்கு என்று தனித்தனி திருமண மண்டபங்களும் கட்டி வைத்துள்ளனர்.
சுப முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடைபெறும. திருக்கல்யாணம்: முருகன் திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகின்றது. அன்று மதுரையிலிருந்து மீனாட்சி அம்மனும் சொக்கரும் மகனது திருமண வைபவத்திற்கு இங்கு வருகை தருகின்றனர்.
முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் முடிந்த பிறகு அவர்கள் அருகில் இருக்கும் தேவேந்திர குல வேளாளர் மடத்துக்குச் செல்கின்றனர். தேவேந்திரனின் மகளான தெய்வயானையின் திருமணம் என்பதால் அவளை அவள் கணவர் முருகனுடன் சேர்ந்து தாய் வீடான தேவேந்திரர் மடத்துக்கு அழைத்துச் சென்று சிறப்பு செய்கின்றனர்.
சிறப்பு வழிபாடுகள்:
முருகனுக்கு உகந்த நாளான வைகாசி விசாகத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. திருக்கார்த்திகைக்கும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. இது தவிர ஆடிக்கிருத்திகை புரட்டாசியில் வேல் வாங்கும் திருவிழா ஐப்பசியில் கந்த சஷ்டி தைப்பூசம் தேர்திருவிழா பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் விழா என்று மாதந்தோறும் இக்கோயிலில் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். .
துணைக் கடவுளர்: திருப்பரங்குன்றத்தில் அம்பாள் ஆவுடை நாயகி தெற்கு நோக்கி இருக்கின்றாள். விநாயகர் கற்பக விநாயகர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார். கொடி மரத்தின் அருகே ஒரே கல்லில் மூன்று வாகனங்களை வைத்துள்ளனர்.
நடுவில் மிகப்பெரிய நந்தி உள்ளது அதன் ஒரு பக்கம் முருகனுக்கு உரிய மயில்வாகனமும் மறு பக்கம் விநாயகருக்குரிய மூஞ்சூறும் உள்ளது. மகாமண்டபத்தில் நந்தீஸ்வரர் தன் மனைவி காலகண்டியுடன் தனிச் சன்னதி கொண்டு உள்ளார்.
நடராஜர் சுற்றிலும் ரிஷிகள், பார்வதி தேவி, அன்னபூரணி, சிவசூரியன், சந்திரன் ஆகியோருடன் காட்சி தருகின்றார். லிங்க மூர்த்தங்களுக்கு அருகில் வள்ளி தெய்வானையுடன் கூடிய இன்னொரு முருகன் சன்னதி உள்ளது.இவர் அருகில் கருடாழ்வார் நின்றகோலத்தில் காட்சி தருகின்றார்
லிங்கங்கள் பல:
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பக்தி இயக்கத்திற்குப் பிறகு சிவன் கோவில் ஆகவும் மாறியது. இங்கு ஏராளமான சிவலிங்கங்கள் இடம்பெற்றுள்ளன. குடவரை கோவிலுக்கு வலது பக்கத்தில் அப்புலிங்கம், பிரத்விலிங்கம், வாயுலிங்கம், ஆகாய லிங்க,ம் அக்கினி லிங்கம் என்று பஞ்சபூதலிங்கங்கள் உள்ளன. இவற்றிற்கு அருகில் அந்தந்த சிவலிங்கத்திற்குரிய அம்மனும் இணைந்து நின்று தம்பதி சமேதராகக் காட்சி தருகின்றனர்.
தீர்த்தங்கள்:
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு மொத்தம் 11 தீர்த்தங்கள் உண்டு. இங்கும் பால் பரு, தோலில் மறு உள்ளவர்கள் உப்பு மிளகு வாங்கி லட்சுமி தீர்த்தத்தில் காணிக்கையாக போடும் பழக்கம் உள்ளது. இக்கோயில் குடவரை கோவில் என்பதால் கருவறைக்கு மேல் விமானம் கிடையாது.
மலையே விமானமாக உள்ளது என்று சொல்லுகின்றனர் பௌர்ணமி இரவில் கிரிவலம் வருவது இங்கும் அது.
நேர்த்திக்கடன்கள்:
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பல பக்தர்கள் அன்னதான செய்கின்றனர். திருமண தோஷம் புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தொடர்ந்து வணங்கி செல்கின்றனர்.
வீர யுகத்தின் வேல் வழிபாடு:
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதினால் அபிஷேகங்கள் கிடையாது. புனுகு மட்டும் தாழ்த்தப்படுகின்றது. வேலுக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறுகின்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வேலுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர்.
வேல் எடுத்து வருதல் வைபவம் புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும். அன்று கோவிலில் உள்ள வழிபடு பொருளான வேலை மேலே காசி விஸ்வநாதர் கோயில் வரை ஊர்வலமாகக் கொண்டு செல்கின்றனர்.
அப்போது பக்தர்கள் ஏராளமாக வேல் பவனியில் கலந்து கொள்கின்றனர். மற்ற அறுபடைவீடுகளில் இத்தகைய வேல் வழிபடும் அபிஷேகமும் கிடையாது. திருப்பரங்குன்றத்தில் வேலுக்குத் தரப்படும் முக்கியத்துவம் என்பது இக்கோயில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குத் தலைச் சங்கம் இருந்த வீரயுகத்த்தில் வேலன் வெறியாட்டு நடந்த முருகன் கோவில் என்பதை உறுதி செய்கிறது.
சூரசம்ஹாரம் முடித்து வெற்றிவேலுடன் இங்கு வந்து அமர்ந்ததால் முருகனை விட வேலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக புராணிகர் கருதுகின்றனர்.
நக்கீரன் கோயிலும் கதையும்:
திருப்பரங்குன்றம் கோவிலில் சந்நிதி கொண்டுள்ள ஒரு கடவுளை நக்கீரன் என்கின்றனர். இதற்கு ஒரு கதையும் வழங்குகின்றது. நக்கீரர் மதுரை செண்பகப் பாண்டியன் அவையில் சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவத்தைப் போக்க திருப்பரங்குன்றத்தில் வந்து தவம் செய்தார்.
அப்போது இங்கிருந்த குளத்தில் ஒரு மீன் பாதி மீனாகவும் பாதி பறவையாகவும் இருந்ததை கண்டதும் அவர் தவம் கலைந்தது. அப்போது அங்கு ஒரு பூதம் சிவ தியானத்திலிருந்து 999 பேரை சிறைப் பிடித்து வைத்திருந்தது.
நக்கீரரின் தவம் கலைந்ததும் அவரையும் சேர்த்து ஆயிரம் பேரையும் சிறையில் அடைத்துவிட்டது. பூதத்திடம் இருந்து விடுபடுவதற்காக நக்கீரன் குகைச்சிறைக்குள் இருந்தபடி முருகன் மீது திருமுருகாற்றுப்படை பாடினார்.
நக்கீரரின் வேண்டுதலைக் கேட்ட முருகன் தன் வேலால் குகையைத் தகர்த்து பூதத்தைக் கொன்று சிவ தியானம் செய்த சிவயோகிகளை விடுவித்தார். இவர்கள் அடைக்கப்பட்டு இருந்த குகை பஞ்சாட்சர குகை என்று அழைக்கப்படுகிறது.
இக்குகை சரவணப் பொய்கையின் அருகில் உள்ளது. நக்கீரர் முருகப் பெருமானிடம் பூதம் தன்னைத் தீண்டியதால் ஏற்பட்ட பாவத்தைத் தொலைக்க தான் கங்கையில் போய் நீராட வேண்டும் என்றார். உடனே முருகன் 'நீ கங்கை வரை போக வேண்டாம்' என்று சொல்லி வேலை பாறையில் ஓங்கி ஊன்றினார்.
கங்கை நதி மலையில் இருந்து சுனையாகப் பெருக்கெடுத்து ஓடியது. நக்கீரர் நீராடி பாவம் நீங்கப் பெற்றார். இதனை காசி தீர்த்தம் என்கின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது இக்காசி தீர்த்தம் காணப்படுகின்றது. இதற்கு அருகில் மேற்கு நோக்கி காசி விசுவநாதர் விசாலாட்சி தண்ணீர் உள்ளது.இதனை மலை சுனை என்று இங்குள்ள மக்கள் அழைக்கின்றனர்.
நவ வீரர்கள் தோன்றிய கதை:
திருப்பரங்குன்றம் முருகன் சூரப்தமனுடன் நடத்திய போரில் அவனை வதம் செய்வதற்கு உதவியாக இருந்த வீரபாகு வீரகேசரி வீரமகேந்திரன் வீரமகேஸ்வரன் வீர ராட்சசன் வீரமார்த்தாண்டன் வீராந்தகன் வீரதீரன் வீரசோழன் ஆகிய நவ வீரர்களுக்குத் தனி சன்னதி முன் மண்டபத்தில் உள்ளது.
இவர்கள் பிறப்புக்கென்று ஒரு கதை சொல்லப்படுகின்றது. சிவபெருமான் நெற்றிக்கண்ணின் அக்கினிச் சுடரிலிருந்து சிவபாலனாகிய முருகன் தோன்றிய போது அதன் வெப்பம் தாளாமல் பார்வதி அங்கிருந்து வேகமாக ஓடினாள்.
அப்போது அவள் கால் சிலம்பு தெறித்து அதிலிருந்து நவரத்தினங்கள் சிதறின. சிதறிய ரத்தினங்கள் ஒன்பதும் நவசக்திகளாக உருவெடுத்தன. அவர்களும் சிவனை விரும்பி சிவனுக்குக் கருத்தரித்தனர். பார்வதி தேவி இப்பெண்கள் மீது கோபம் கொண்டு நீங்கள் இந்த குழந்தையை பெற்றெடுக்கக்கூடாது என்று சாபம் விட்டாள்.
குழந்தை பெற இயலாததால் ஒன்பது பெரும் ஆத்திரம் கொண்டு நவகாளிகளாக சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் பார்வதியிடம் 'குழந்தைகள் பிறக்கட்டும் தேவி இவர்கள் ஒன்பது பேரும் முருகனுக்குத் துணையாக இருக்கட்டும்' என்று சொல்லி சமாதானம் செய்தார்.
பின்பு நவ சக்திகளுக்கும் ஒன்பது ஆண் குழந்தைகள் பிறந்தன. அவ்வாறு பிறந்தவர்கள் தான் சூரபத்மனை அழிக்க உதவிய ஒன்பது பேராவர்.
மயில்கள்:
திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு வாகனமான மயில்கள் ஏராளமாக திரிவதைக் காணலாம்.குறிப்பாக வெள்ளை நிற மயில்கள் இங்கு நிறைய உள்ளன. தேவர்கள் மற்றும் மகரிஷிகள் வெள்ளை நிற மயில் வடிவில் இங்கு இருப்பதாகப் புராணிகர் கூறுவர்.
நிறத்துக்குரிய மெலோட்டோனின் சுரக்கவில்லை என்றால் மயில்கள் தோகையில் நிறம் இருக்காது. எனவே வெள்ளை மயில் என்பது நிறக் குறைபாடு உடைய மயில் என்று அறிவியல் கருதுகின்றது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |