கடன் தொல்லையும் தீர்க்கும் ஆச்சாள்புரம் சிவன் கோயில்
ஆச்சாள்புரம் திருக்கோயில் என்பது அம்மனின் பெயரால் அழைக்கப்படுகின்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் இருந்து வடகிழக்கில் 13 கிலோமீட்டர் தொலைவிலும் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்கில் 13 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத் தலங்களில் இத்தலம் ஐந்தாவது தேவாரத் திருத்தலமாகும் .ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற காவிரி வடகரையில் உள்ள திருத்தலங்களில் ஒன்றாகும். தர்மபுரம் ஆதீனத்தின் கீழ் இத்திருக்கோவிலின் நிர்வாகம் உள்ளது.
ஊரும் பேரும்:
திருநல்லூர் பெருமணம் என்ற ஊரில் உள்ள பெருமணமுடைய மகாதேவர் கோவில் மக்கள் பேச்சு வழக்கில் ஆச்சாள்புரம் திருக்கோவில் என்று அழைக்கப்படுகின்றது. நல்லூர் என்பது ஊரின் பெயர் பெருமணம் என்பது இக்கோவிலின் பெயர் ஆகும்.
ஞானசம்பந்தருக்கு திருமணம் நடந்ததும் திருமண கோலத்துடன் அவர் அருள் ஜோதியில் கலந்ததும் இத்திருத்தலத்தில் என்பதால் இத்தலம் திருமண திருத்தலமாகவும் முக்தி ஸ்தலமாகவும் ஒரு சேர விளங்குகின்றது.
கோயில் அமைப்பு:
ஆச்சாள்புரம் திருக்கோவில் கிழக்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலைகளுடன் கூடிய இராஜ கோபுரத்தைக் கொண்டுள்ளது. இராஜகோபுரத்தை அடுத்து நந்திமண்டபமும் நூற்றுக்கால் மண்டபமும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கால் மண்டபத்தில் சம்பந்தர் அவர் மனைவி தோத்திரப் பூர்ணாம்பிகை மனக்கோலத்தில் தனிச் சன்னதியில் உள்ளனர்.
கருவறைநாதர்:
பெருமணமுடைய மகாதேவர் கிழக்கு நோக்கி காட்சி அருளுகின்றார். பெருமணம் என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலின் கருவறையில் எழுந்தருளியிருப்பவர் சிவலோக தியாகேசர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றார். கல்வெட்டுகள் இவரை திருப்பெருமணமுடைய மகாதேவர் என்று குறிப்பிட்டுள்ளன.
ஆச்சாள்:
ஆச்சாள், ஆச்சி, அம்பாள், அம்பிகை என்பன மூதாய்க்குரிய வெவ்வேறு பொதுப் பெயர்களாகும். இங்கு அம்மையின் பெயர் வெண்ணீற்று உமை நங்கை ஆகும். விபூதியின் பெயரால் விபூதி கல்யாணி என்றும் ஸ்வேத விபூதி நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.
மக்கள் பேச்சு வழக்கில் ஆச்சாள் எனப்படுகிறாள். இங்கு நடந்த ஞான சம்பந்தர் திருமணத்தில் அம்பாளே நேரில் வந்து அனைவருக்கும் விபூதி பிரசாதம் அருளினாள். எனவே இவ்வூர் அவள் பெயரால் ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படுகிறது.
வேறு சிறப்புகள்:
ஆச்சாள்புரம் திருக்கோவிலின் தலவிருட்சம் மாமரமாகும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டவர் பலர். அவர்களில் முக்கியமானவர்கள் ஞானசம்பந்தர் சேக்கிழார் பிரம்மன் முருகன் திருக முனிவர் வசிஷ்ட முனிவர் அத்திரி முனிவர் வியாச முனிவர் மிருகண்டு முனிவர் அகத்திய முனிவர் ஜமதக்னி முனிவர் ஆகியோராவர்.
திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீல நக்க நாயனார் போன்றோரும் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர் இங்குப் பஞ்சாட்சர தீர்த்தம் முதலாக 11 தீர்த்தங்கள் உள்ளன. இங்குத் தினமும் ஆறு கால பூஜை முறையாக நடைபெறுகின்றது கோவிலுக்கான தல புராணத்தை கோட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றினார்.
திருமணத் திருத்தலம் ஞானசம்பந்தர் திருமணம் செய்ய முனையும் போது அவரை தடுத்தாட்கொண்ட இறைவன் அவருக்கு தோத்திர பூரணாம்பிகை என்ற பெயருடைய பெண்ணை இக்கோவிலில் வைத்துத் தான் திருமணம் செய்து கொடுத்தார். எனவே இங்கு ஞானசம்பந்தரும் தோத்திரம் பூர்ணாம்பிகையும் இணைந்து மனக்கோலத்தில் இருக்கும் திருமேனிகள் உள்ளன.
சாமி சந்நிதியின் வாயிலின் மேற்புறம் ஞானசம்பந்தர் சாலோகம் பெற்ற நிலை அருட்சோதியில் உட்கலந்த காட்சி ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இக்கோவிலில் ஞானசம்பந்தரும் அவர் மனைவியும் இணைந்து இருப்பதினால் திருக்கோவில் திருமண திருத்தலமாக விளங்குகின்றது .திருமண தோஷம் உடையவர்கள் இங்கு வந்து இவர்களை வணங்கிச் செல்ல தோஷம் நீங்கே நல்ல திருமண வாழ்க்கை கிடைக்கப்பெறுவர்.
கோயில் விழாக்கள்:
ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளில் இக்கோவிலில் சம்பந்தர் தோத்திர பூரணாம்பிகை திருமணமும் பின்பு அனைவரும் முக்தி பெற்ற நிகழ்வும் நடத்திக் காட்டப்படும். வைகாசி மூலத் திருநாளில் காலை 7 முதல் 8 45 சம்பந்தர் உபநயன நிகழ்ச்சி நடைபெறும்.
மாலை 5 மணிக்கு மேல் திருமுறைகள் வீதிவலம் வரும். ஆறரை மணிக்கு மாலை மாற்றும் சம்பவம் நடைபெறும். இரவு ஒன்பது முதல் பத்தரைக்குள் திருமணம் நடைபெறும். அன்றிரவு 2 மணிக்கு சம்மந்தருடன் தேவாரத் திருமுறைகள் ஆலய வீதி உலா வரும்.
அதிகாலை நாலே முக்காலுக்கு சம்பந்தர் சிவ ஜோதியில் கலக்கும் நிகழ்வு நடத்திக் காட்டப்படும். இந்நிகழ்வினைக் கண்டவர்கள் வாழ்வில் முக்தி அடைவர்.
முக்தி நிகழ்வு:
சம்பந்தரின் திருமணம் முடிந்ததும் அவரது உற்சவமூர்த்தியை, செப்புத் திருமேனியை எடுத்துச் சென்று கருவறைக்குள் இருக்கும் மூலவரின் காலடியில் வைப்பார்கள். பின்பு கற்பூரக் கட்டிகளை ஏற்றி ஆராதனை செய்வார்கள். இதுவே சம்பந்தர் ஜோதியில் கலக்கும் காட்சியாகும்.
சிவனின் தோழர் சம்பந்தர்: சீர்காழியில் பிறந்த திருஞானசம்பந்தருக்கு மூன்று வயதில் அம்பிகை ஞானப்பால் ஊட்டி சிவஞானம் அளித்தார். இதன் பின்பு இவர் சைவத் திருத்தலம் தோறும் சென்று சிவபெருமானைப் பற்றிப் பதிகங்கள் பாடினார்.
திருக்கோக்கா என்ற திருத்தலத்தில் பொன்னாலாகிய தாளங்களை சிவபெருமானிடம் இருந்து பெற்றார். பட்டீஸ்வரத்தில் இவருக்கு சிவபெருமான் முத்துப்பந்தல் அருளினார். திருவாவடுதுறையில் பொற்கிழி பெற்றார். திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றார்.
இறந்து போன வணிகர் ஒருவரை திருமருகல் திருத்தலத்தில் உயிர்ப்பித்தார். திருமறைக்காட்டில் திருக்கோவில் கதவைத் திறக்கவும் அடைக்கவும் பாடினார். திருவோத்தூரில் ஆண் பனையை பெண் பனை ஆக்கினார். இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணை எரித்த அஸ்தியைக் கொண்டு அவளை மீண்டும் திருமயிலையில் உயிர்ப்பித்தார்.
ஒரேநாளில் திருமணமும் முக்தியும்:
சம்பந்தர் வளர்ந்து 16 வயது அடைந்ததும் அவருக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். அவருக்குத் திருமணத்தில் ஆர்வம் இல்லை என்றாலும் இதுவும் சிவபெருமானின் திருவிளையாடல் என்ற எண்ணத்தில் சம்மதித்தார்.
சீர்காழிக்கு வடக்கே திருநல்லூரில் வாழ்ந்து வந்த நம்பியாண்டார் நம்பியின் மகள் தோத்திரப் பூர்ணாம்பிகையை இவருக்கு பெண் பேசி முடித்தனர். பெருமண நல்லூரில் (இக்கோவிலில் கோவிலில்) வைத்துத் திருமணம் செய்ய முடிவு செயதனர்.
சம்பந்தருக்கு வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தன்று திருமணம் என்று நாள் குறிக்கப்பட்டது. திருமணத்திற்கு எல்லோரும் தயாராக இருந்த நிலையில் இத்திருத்தலத்தில் அம்பிகை வந்து எல்லோருக்கும் விபூதி கொடுத்தார்.
அதனால் அவளை விபூதி கல்யாணி என்றும் திரு வெண்ணீற்று அம்மை என்றும் அழைத்தனர். இன்றைக்கும் இவ்வூரில் அம்பிகை சன்னதியில் திருநீறே பிரசாதமாக வழங்கப்படுகிறது. குங்குமம் கிடையாது.மணப் பெண்ணை அழைத்து வந்து சம்பந்தரின் வலப்பக்கம் அமர வைத்தனர்.
திருமணச் சடங்குகள் தொடங்கின. திருநீலநக்க நாயனார் சடங்குகளை செய்து கொண்டிருந்தார். சம்பந்தர் மணமகளோடு அக்கினியை வலம் வந்தபோது அசரீரி ஒலித்தது. 'கருவறையில் லிங்கத் திருமேனி பிளந்து அருள்ஜோதி தோன்றும்.அதில் ஒரு வாசல் இருக்கும். அதற்குள் நீ வந்து என்னுடன் கலந்துவிடு' என்ற இறைவனின் குரல் கேட்டது.
சிவலோகத் தியாகேசர்:
அசரீரி கேட்டதும் ஞானசம்பந்தர் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி தம்முடன் வந்திருந்த அனைவரையும் கருவறைக்குள் தன்னுடன் வருமாறு கூறினார். அனைவருமே சிவஜோதியில் கலந்து முக்தி பெற்றனர்.
இவர்கள் அனைவரும் முக்தி பெற்ற பின்பு சிவலிங்கம் பழைய படி காட்சி அளித்தது. அனைவரையும் சிவலோகத்திற்கு அழைத்துச் சென்ற ஈசன் என்பதால் என்பதால் இத்திருத்தலத்தின் இறைவனை சிவலோக தியாகேசர் என்று அழைக்கின்றனர்.இந்நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தன்று நடத்தப்படுகின்றது
கதை 2 :
காட முனிவர் பெருமணம் கோவிலுக்கு வந்த போது இத்தலத்தில் தான் கண்ட இடமெல்லாம் சிவலிங்கம் இருப்பதாக உணர்ந்ததார். எனவே தரையில் கால் வைத்து மிதித்து நடக்கப் பயந்தார். தன் தலையால் நடந்து சென்று நிருதி திசையில் அமர்ந்து சிவ தியானத்தில் மூழ்கினார்.
கடன் தீர்க்கும் திருத்தலம்:
இங்கே ருண லிங்கேஸ்வரருக்குத் தனி சன்னதி உள்ளது. இவரை வழிபடுபவர்கள் ருணம் எனும் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவர். சிவனுக்கும் அம்பாளுக்கும் சேலை வேட்டி வாங்கி தந்து தருவதை இங்கு நேர்த்திக் கடன்களாக நிறைவேற்றுகின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |