ஆதிசக்தி வரலாறும் வழிபாடும்
உலகின் படைப்பு பற்றி ஆதிமனிதன் சிந்தித்தபோது படைப்பாற்றல் என்பது பெண்ணுக்கு உரியது என்ற அறிவியல் உண்மை தெளிவாகியது. ஆக, இந்த உலகத்தையும் (ஆதி சக்தி) ஒரு பெண் தான் படைத்திருக்க வேண்டும் என்ற யூகத்தில் ஆதி மனிதன் உலகைப் படைத்தவள் பெண் என்ற நம்பினான். பின்பு மெல்ல மெல்ல குழந்தைப் பேறுக்கு ஆணின் பங்கும் அவசியம் என்ற இரண்டாவது அறிவியல் உண்மை தெரிந்ததும் பெண் தெய்வத்துடன் ஆணையும் சேர்த்து (ஆதி சிவன்) தெய்வமாக்கி வணங்கினான்.
முப்பெருந்தேவியர்
இந்தியாவில் புராணங்களின் படி அண்ட சராசரங்களையும் படைத்தவள் ஆதிபராசக்தி என்ற பெண் தெய்வம் ஆவார். இவள் ஞானசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி என்று மூன்றாக பிரிந்து இவ்வுலகை காத்து வருகின்றாள். இவளை மகா மாயா என்றும் புராணங்கள் அழைக்கின்றன.
ஆதிபராசக்தியிடம் இருந்து சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என்ற மூன்று சக்திகள் தோன்றின. இவ்வுலகின் படைத்தல் காத்தல் அழித்தல் செய்யவும் இவர்களுக்குக் கணவர்களாக விளங்கவும் மூன்று ஆண் தெய்வங்களான பிரம்மன், விஷ்ணு சிவன் ஆகியோரை ஆதி சக்தி படைத்தாள்.
சக்தி சம்பிரதாயம்
முழுக்க முழுக்க ஆதி சக்தியை மட்டுமே வழிபடும் சக்தி வழிபாடு என்பது சக்தி சம்பிரதாயம் எனப்படும். இவர்கள் வேறு எந்த தெய்வத்தையையும் குறிப்பாக ஆண் தெய்வங்களை வணங்குவதில்லை. சக்தி சம்பிரதாயத்தில் சக்தி சாத்வீக, ராஜச, தாமஸ குணங்கள் உடையவளாக விளங்குகிறாள்.
அவற்றை காதி சம்பிரதாயம், ஹாதி சம்பிரதாயம், சாதி சம்பிரதாயம் என்பர். இவற்றில் காதி என்பவள் அமைதியே (சாத்வீகம்) உருவானவள். ஹாதி எனும் என்பவள் ராஜச குணம் உடையவள் கோப ரூபினி. இவள் தீயவர்களை ஹதம் (வதம்) செய்வாள். சாதி சம்பிரதாயத்தில் அவள் தாமச குணம் உடையவள் வேகம் குறைந்தவள்.
சக்தியின் ஏழு வடிவங்கள்
ஆதிசக்தி அல்லது ஆதி பராசக்திக்கு கணவர் கிடையாது. அவள் மகா கன்னிகையாக விளங்குகிறாள். மகா கன்னிகையான சக்தி ஏழு கன்னிகைகளாக வடநாட்டிலும் தென்னாட்டிலும் வழிபடப்படுகிறாள். வடநாட்டில் அஷ்ட மாத்ரிகா என்று எண்ணிக்கையை எட்டு ஆக்குவர். ஆதி சக்தி பிராமி, வைஷ்ணவி, மகேஸ்வரி, இந்திராணி, கவுமாரி, வராகி, சாமுண்டி என்று 7 கன்னிகளாக வணங்கப்படுகிறாள்
ஏழு கன்னிமாரின் கணவர்கள்
பிற்காலத்தில் ஒரு ஒரு பெண் தனித்து வாழ முடியாது என்ற சூழ்நிலையில் தெய்வம் மட்டும் எவ்வாறு தனித்து செயல்பட முடியும் என்ற கருத்தில் ஒவ்வொரு பெண் தெய்வத்திற்கும் ஒரு ஆண் தெய்வத்தை இணை சேர்த்தனர். பிரம்மன் (பிராமி), விஷ்ணு (வைஷ்ணவி), மகேஸ்வரன் (மகேஸ்வரி) இந்திரன் (இந்திராணி), குமரன் (கௌமாரி) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
வராகிக்கும் சாமுண்டிக்கும் பொருத்தமான ஆன் கடவுளர் அமையவில்லை. வராகிக்கு வராக மூர்த்தியையும் சாமுண்டிக்கு சாமுண்டன் என்று மீண்டும் ஈஸ்வரனையும் குறித்தனர். வராக மூர்த்தி எனப்படும் விஷ்ணுவின் வராக அவதாரம் பூமாதேவியுடன் தொடர்புடையது.
தவிர ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாராட்டுகின்ற தேவியின் தளபதியாக விளங்குகின்ற வராஹியோடு எவ்விதத்திலும் தொடர்புடையது கிடையாது. பெயர் ஒற்றுமை காரணமாக வராக மூர்த்தியை குறிப்பிட்டனர் என்று கருதத் தோன்றுகிறது.
மகா வித்யாவின் பத்து அவதாரம்
ஆதி சக்தி வழிபாடு மகாவித்யா என்ற பெயரில் வளர்ச்சி பெற்றது. மஹாவித்யா உபாசகர்கள் அவளை. காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்ன மஸ்தா, தூமாவதி, பகாளமுகி, மாதங்கி, கமலா என்ற பத்து அவதாரங்களாக வணங்குகின்றனர். இவர்களில் தாரா, தூமாவதி, மாதங்கி போன்றோர் நீண்ட வரலாறு உடையவர்கள். திரிபுர சுந்தரி திரிபுரம் எரித்த சிவனின் கதையோடும் தொடர்பு படுத்தப் படுகிறாள். சிறுமியாகவும் வணங்கப்படுகிறாள்
அறுவகைச் சமயம்
ஆதிசங்கரர் தன் காலத்தில் நாடெங்கும் பரவிக் கிடந்த வழிபாட்டு முறைகளை ஆறாக வகைப்படுத்தினார். அவை சௌமரம், (சூரியன்), சாக்தம் (சக்தி) கௌமாரம் (குமரன்), சைவம் (சிவன்) வைணவம் (விஷ்ணு) காணாபத்தியம் (கணபதி) ஆகும். வைதீக சமயங்களின் வளர்ச்சிக்குப் பிறகு பிறகு சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சவுரம் போன்றவை செல்வாக்கிழந்து விட்டன.
வெகு சிலரே ஆதி சக்தி சக்தி உபாசனையில் இன்னும் ஈடுபட்டுள்ளனர். சைவ சமயம் பேரெழுச்சி பெற்ற பின்பு கௌமாரமும் காணாபத்தியமும் சாக்தமும் சைவத்திற்குள் இணைந்தன.. சிவனுக்கு மனைவியாக சக்தியும் சிவனின் மகனாக குமரனும் சக்தியின் மகனாக கணபதியும் சைவத்துக்குள் ஈர்க்கப்பட்டனர். வைணவம் மட்டும் தனித்து நின்றது.
ஸ்ரீ குலம், காளி குலம்
சக்தி வழிபாட்டினர் ஸ்ரீ குலம் என்றும் காளி குலம் என்றும் இரு வகைப்படுவர். ஆதி சக்தி கருணையும் கடுமையும் வடிவானவள். அவளே ஆக்கும் சக்தியும் அழிக்கும் சக்தியும் ஆவாள். ஆனால் புராணங்கள் அவளை சக்தி (பார்வதி) - கருணையின் வடிவான அன்னை என்றும் காளி கொடுமையை தண்டிக்கும் கொலைத் தெய்வம் என்றும் பிரித்தன.
அடக்கம் நிறைந்தவள் (ஸ்ரீ குலம்) , அடங்கா பிடாரி (காளி குலம்) என்று பிரிக்கப்பட்டாள். சக்தி வழிபாடு பல வடிவங்களில் உலகெங்கும் வளர்ந்து வந்த போதும் காளி வழிபாடு அதன் நிழலாக இருள் வடிவாக கருப்புத் தெய்வமாக கொலைத் தெய்வமாக பலித் தெய்வமாக எல்லா நாடுகளிலும் இன்னும் இருக்கின்றது.
காளி குலம்
இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களான மேற்குவங்கம், பீகார், அஸ்ஸாம், ஒரிசா, நேபாளம் மற்றும் தென்கோடியில் உள்ள கேரளம் ஆகிய மாநிலங்களில் காளி குலத்தார் இருக்கின்றனர். அன்னைக்கு கருணையும் உண்டு கடுமையும் உண்டு என்பதைக் குறிக்கும் வகையில் பௌத்த சமயம் தான் பரவிய இடங்களில் எல்லாம் பெண் தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததால் அச்சமயம் பரவி இருந்த அந்த மாநிலங்களில் இன்றும் காளி குலத்தார் துடியான பெண் தெய்வங்களை வணங்குகின்றனர்.
சக்திக்கு உரியவை
சிவனுக்கு வில்வமும் திருமாலுக்கு துளசியும் இருப்பது போல சக்திக்கு வேம்பு திகழ்கின்றது. சிவனுக்கு நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமும் விஷ்ணுவுக்கு ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரமும் முருகனுக்கு சரவணபவ என்ற ஆறு எழுத்து மந்திரமும் இருப்பது போல சக்திக்கு ஐயும் கிலியும் சௌவம் என்ற மூன்றெழுத்து மந்திரம் உள்ளது.
காளிக்கு ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கிலீம் என்ற மூன்றெழுத்து மந்திரமும் சக்தி உபாசகர்களின் ஜபதபங்களின் போது பயன்படுத்தப்படுகின்றது. இவர்கள் எந்த மந்திரத்தை சொல்வதாக இருந்தாலும் அவற்றை இந்த மூன்றெழுத்து மூல மந்திரத்தோடு சேர்த்துத் தான் சொல்வார்கள் எடுத்துக்காட்டாக கண் நலம் காக்கும் சூரியனுக்குரிய மந்திரம் ஓம் ஸ்ரீம் ஸஹ்ரீம் க்லீம் கமலா தரணி ஆதித்த வர்ணாயை நமஹ
நிலையம்
தேவியை குண்டலினி யோகத்தில் சுருண்டு கிடக்கும் பாம்பாக மூலாதாரத்தில் அசையா நிலையில்வைத்துப் காண்கின்றனர். இதனால் இவள் நிலையம் எனப்படுகிறாள். இங்கிருந்து இவளைத் தட்டி எழுப்பி ஆதிவெளி எனும் பரவெளிக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.
மூலாதாரச் சக்கரமாக இருக்கும் இவளை மெல்ல மெல்ல மேலே ஏற்றி ஆயிரம் இதழ்கள் கொண்ட உச்சிக்கமலத்தில் ஆண்டவனோடு சேர்த்தால் அங்கு இருவரின் கூடல் நடக்கும். இதனை ஆனந்த தாண்டவம் என்பர். இது ஒரு யோக சாதனை ஆகும். உடம்பை யோக சாதனமாகக் கொண்டு செய்யப்படும் யோகப் பயிற்சி.
இதனை விளக்க வேறு வழி தெரியாமல் சக்தி சிவன் ஐக்கியமாக எடுத்துக்காட்டி விளக்கினர். யோக சித்தி ஏற்பட்டால் அப்போது அமுத உணர்வு பொங்கி உடலெங்கும் பிரவாகமாய்ப் பரவும். நாடி நரம்புகளில் புத்துணர்ச்சி தோன்றும் . தன்னைச் சுற்றிலும் அபிராமப் பட்டர் உணர்ந்ததைப் போல் போல் ஒளி வெள்ளம் பெருகுவதை உணர்வர்.
பூப்பு வழிபாடு
தேவிக்குரிய சின்னம் கீழ்நோக்கிய முக்கோணம் ஆகும். அவளின் ஆயுதம் சூலாயுதம். வாகனம் புலி. ஆதி சக்தி படைப்பு தேவதை என்று வணங்கிய காரணத்தினால் அவளுடைய யோனி (ஆவுடை) வழிபடு பொருளாக உள்ளது. அவளுடைய பூப்புக் குருதி தெய்வ சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது.
அசாமில் காமாக்கியா என்ற திருத்தலத்திலும் கேரளாவில் செங்கனூர் என்ற திருத்தலத்தில் இன்னும் சில ஊர்களிலும் தேவியின் பூப்பு வழிபடப்படுகிறது. செங்கன்னுர் பகவதியின் ஆடையில் மாதம் ஒரு முறை பூப்புக் குருதி படிந்திருக்கும். காமாக்யாவில் தேவி ஆண்டுக்கு ஒருமுறை பூப்படைகிறாள்.
அப்போது அக்கோயிலைத் தழுவி ஓடுகின்ற பிரம்மபுத்திரா நதி நிறம் மாறி (சிவப்பாகத்) தோன்றும் கேரளாவிலும் வங்காளத்திலும் குருதி வழிபாடு இன்றைக்கும் வெவ்வேறு வகையில் நடைபெறுகின்றது. முன்பு பூப்புத் தடம் உள்ள ஆடையுடன் பால், மஞ்சள் நீர் சேர்த்து பிழிந்து பிரசாதமாகவும் வழங்கப்பட்டது.
ஷீலா நா கிட்ஸ்
அன்னையாக பெண்ணை வழிபடத் தொடங்கிய காலத்தில் பெண்ணை கர்ப்பவதி உருவத்தில் பெரிய வயிறும் தளர்ந்த மார்பகங்களும் கொண்ட வடிவில் ஆதி மக்கள் வழிபட்டனர். இத்தகைய சிற்பங்கள் சிந்து சமவெளி எங்கும் கிடைத்துள்ளன. மனிதர் வாழ்ந்த அனைத்துப் பகுதிகளிலும் மேலை நாடுகள் உட்பட முதலில் இத்தகைய உருவங்கள் தாம் வழிபடப்பட்டன. ஷீலா நா கிட்ஸ் (Sheela na gitz) என்பது இங்கிலாந்தில் இவ்வுருவத்தின் பெயர் ஆகும். மேரி மாதாவின் கோயில் வாசலில் உள்ள மலைக் குகை போன்ற கட்டுமானம் தாய்மையைக் குறிப்பதாகும்.
சக்தியின் தோல்வி
சிவசக்தி ஐக்கியத்தைக் குறிக்கும் அறுகோணசக்கரம் / நட்சத்திர வடிவத்தில் இருக்கும். இதில் மேல் நோக்கி இருக்கும் முக்கோணம் சிவபெருமானை குறிக்கின்றது. கீழ் நோக்கிய முக்கோணம் சக்தியை குறிக்கும். பெண்களை அடிமைப்படுத்திய ஆணாதிக்க சமுதாயம் பெண் தெய்வங்களையும் ஆண்களுக்கு அடிமைப் பட்டவர்களாக காட்டும் வகையில் புதிய கதைகளைப் புனைந்தன
தாட்சாயினி கதை
தாட்சாயினி கதையில் சிவன் பெரியவனா சக்தி பெரியவளா என்ற வினா எழுப்பப்பட்டு சக்தியை சிவன் தலைக்கு மேல் தூக்கிக் கோபமாகச் சுற்றியதில் அவள் 108 துண்டங்களாக பல்வேறு இடங்களில் போய் விழுந்தாள். அவை இன்று சக்திக்குரிய 108 திருத்தலங்களாக விளங்குகின்றன என்பது கதையின் சாராம்சம். இந்த கதை சிவன் சக்தியைச் சிதறடித்தார் என்பதை உணர்த்துகின்ற கதையாகும்.
சக்திக்குப் பிள்ளை இல்லை ஏன்?
.சிவபெருமான் தியானத்தில் இருந்த போது அவருடைய தியானத்தைக் கலைக்க வேண்டும் என்று உலக நன்மைக்காக காமதேவன் அவர் மீது மலர் அம்பு தொடுத்தான். சிவபெருமான் கோபத்தோடு விழித்து காமனை எரித்துச் சாம்பலாக்கி விட்டார்.
இதனால் அவனுடைய மனைவி ரதிதேவி இனி 'உங்களுக்கு குழந்தையே பிறக்காது நீங்கள் கூடி மகிழ இயலாது' என்று சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு சாபம் கொடுத்து விட்டாள். இதனால் சிவனின் சக்திக்குக் குழந்தை இல்லை. சிவபாலன் எனப்படும் குமரன் அக்நிபுத்திரன் ஆவான். அவனுக்கும் பார்வதி/ உமா/ தேவி/ சக்திக்கும் தொடர்பில்லை. விநாயகர் உமாவின் அழுக்கு உருண்டையில் இருந்து தோன்றியவர். அவருக்கும் சிவனுக்கும் தொடர்பில்லை.
லஜ்ஜா கௌரி
சிவனின் இரண்டு மனைவியருள் ஒருத்தி கௌரி. இவள் மிகவும் அமைதியானவள். சிவனின் தலையில் அவருடைய சடாமுடியில் ஒளித்து வைத்திருக்கும் கங்கை எனப்படுபவள் வாய் துடுக்கானவள். கங்கையின் வேகத்தைக் குறைக்க அவர் தன் சடாமுடியில் தாங்கினார் என்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட அவளை அவர் தன் துணைவியாக ஏற்றுக் கொண்டார் என்பதும் கதை கூறும் தகவல் தான்.
இந்த கௌரியை லஜ்ஜா கௌரி என்று அழைக்கும் ஒரு கதையும் வழக்கில் உள்ளது. சிவன் ஒருநாள் பார்வதியிடம் தனக்கு பிரியமான போர்வை ஒன்றைம் கொடுத்து இதைப் பத்திரமாக வைத்துக் கொள் என்று சொல்லிச் சென்றார். எலி கடித்து விட்டதே , இனி கணவரின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமே என்று அஞ்சிய பார்வதி தையல்காரர் அழைத்து வந்து அந்த போர்வையைத் தைத்துத் தரும்படி வேண்டினாள்.
தையல்காரர் அவளிடம் 'நீ என்னுடன் ஒரு முறை இன்பம் துய்க்க சம்மதித்தால் இதைத் தைத்து தருகிறேன்' என்றார் அவளும் வேறு வழி இல்லாமல் தையல்காரருக்கு சம்மதித்து கால்களை விரித்துப் படுத்த நிலையில் தன் முன்னால் நின்ற தையல்காரர் சிவபெருமானாக மாறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள். வெட்கத்தில் தலை தொங்கி கீழே விழுந்து விட்டது.
இப்போது தலையற்ற முண்டமாக கால்களை விரித்த நிலையில் இருந்தாள். இப்படியே இரு இதுதான் உனக்குத் தண்டனை என்று சிவபெருமான் அவளுக்கு சாபம் கொடுத்து விட்டார். எலியாக வந்ததும் தையல்காரராக வந்ததும் சிவபெருமான் தான் என்பதை பார்வதி அறியவில்லை.
இந்த பெண் உருவத்திற்கு பெயர் லஜ்ஜா கௌரி. இந்த பெண்ணின் உறுப்பிற்கு பதில் ஒரு தாமரையை வரைந்து வைத்து அல்லது சிலையில் தாமரையை செதுக்கி வைத்து இந்தியா முழுக்க பல மாநிலங்களிலும் லஜ்ஜா கௌரியை வழிபடுகின்றனர். காரணம் இந்தப் பெண் உருவம் தாய்த் தெய்வ வழிபாட்டின் ஆதி காலத்து உருவம் ஆகும்.
நிறைவு
இவ்வாறு ஆதி சக்தியை அன்னையாக வழிபடத் தொடங்கி பின்பு அவளிடம் இருந்து மூன்று தேவியர் உருவாகி இவ்வுலகின் படைக்கும் காக்கும் அழிக்கும் தொழில்களைச் செய்யும் கணவன்மார்களுடன் இணைந்து இவ்வுலகை இரட்சித்து காப்பாற்றி வருகின்றனர்.
காலப்போக்கில் பெண் தெய்வங்களுடைய இன்றியமையாமை குறைக்கப்பட்டு ஆண் தெய்வங்களின் அதிகாரம் அதிகமாக்கப் பட்டது. சமுதாயம் எப்படியோ சமயமும் அப்படித்தான் இருக்கும். இதனை, எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்றார் அவ்வையார். சமயம் சட்டம் சம்பிரதாயங்கள் அனைத்தும் அதிகாரத்தில் இருப்பவர் விருப்பப்படியே அமைவது உலகத்து இயற்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |