நீலமணி நாகராஜன் வணங்கிய திருநாகேஸ்வரம்

By பிரபா எஸ். ராஜேஷ் Dec 01, 2024 08:28 AM GMT
Report

இந்திரன், ரிஷிகள் மற்றும் நாகங்கள் சிவபெருமானை வழிபட்ட திருநாகேஸ்வரம் கும்பகோணத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் தென்கரையில் உள்ள 29ஆவது சிவத்தலமாகும். இது மூவர் பாடிய புகழை உடைய சிவத்தலம்.

இங்கு மூலவரை நாகநாதர், செண்பகாரண்யேஸ்வரர் என்றும் அம்மனை கிரிகுஜாம்பாள்,பிறை அணி நுதலாள் என்றும் அழைக்கப்பர். . செண்பகம் இங்கு தலவிருட்சமாகும். இங்கே உள்ள தீர்த்தத்தின் பெயர் சூரிய தீர்த்தம்.

 பெரிய கோவில்

திருநீலக்குடி சப்தஸ்தானம் என்று அழைக்கப்படும் ஏழு திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு தேவரடியார்கள் இருந்த மடவார் வளாகம் உள்ளது. 630 க்கு 200 அடி நீள அகலத்தில் மிகப்பெரிய பரப்பளவில் இக்கோவில் அமைந்துள்ளது.

கோவிலுக்குள் நான்கு வீதிகளும் மதில் சுவரும் நான்கு கோபுர வாயில்களும் உள்ளன. மதில் சுவரை அடுத்து பெரிய பிரகாரம் உள்ளது. திருநாகேஸ்வரம் கோயிலின் வடக்கே பூந்தோட்டம் அமைந்திருக்கின்றது.

கிழக்குக் கோபுர வாசல் வழியாக உள்ளே போகும்போது முதலில் விநாயகர், அடுத்து பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம் ஆகியவை உள்ளன. தெற்கே தீர்த்தக் குளம் இருக்கின்றது. வடக்கில் நூற்றுக்கால் மண்டபம் ஒன்று அழகிய சிற்பங்களுடன் உள்ளது.

நீலமணி நாகராஜன் வணங்கிய திருநாகேஸ்வரம் | Thirunageswaram Temple In Tamil

முப்பெருந்தேவியர்

திருநாகேஸ்வரம் கோவிலில் அம்பாள் சன்னதியில் அவளுக்கு இருபுறமும் சரஸ்வதியும் லட்சுமியும் உள்ளனர். இம்முப்பெரும் தேவியர் சிலைகளும் காலத்தால் பிற்பட்டவவை ஆகும். இவை கற்சிலைகள் அல்ல. சுதை சிற்பங்கள். எனவே இவற்றிற்கு அபிஷேகம் கிடையாது.

தை மாசம் 48 நாட்கள் சன்னதி அடைக்கப்பட்டு திரை தொங்க விடப்பட்டிருக்கும். அக்காலத்தில் இச்சிற்பங்களுக்கு புனுகு சாத்தப்படும். தை மாத கடைசி வெள்ளி அன்று அம்மன் சந்நிதியின் முன் மண்டபத்தில் அம்மனுக்கு அன்னம், காய்கறி, பழங்கள் ஆகியவை படைக்கப்படும். அம்மன் கோவிலில் முப்பெரும் தேவியரோடு பால சாஸ்தா, சங்க நிதி, பதுமநிதி ஆகியோரும் உள்ளனர்.

தவறு செய்பவர்களை நடுங்க வைக்கும் மடப்புரம் பத்ரகாளி அம்மன்

தவறு செய்பவர்களை நடுங்க வைக்கும் மடப்புரம் பத்ரகாளி அம்மன்

சேக்கிழாருக்கு சிலை

திருநாகேஸ்வரம் கோவிலில் பெரிய புராணம் எழுதிய சேக்கிழாருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இங்கே சிலைகள் உள்ளன. சேக்கிழார் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார். அவர் தம்பி பாலறாவாயருக்கும் அவர் தாயாருக்கும் உருவச் சிலைகள் உள்ளன. சேக்கிழார் தொண்டு செய்த திருத்தலம் இது என்ற பெருமை. இத்திருத்தலத்துக்கு உண்டு.  

நாகங்கள் வழிபட்ட தலம்

ராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி என்ற பல நாகங்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டுள்ளன. இப்பகுதியில் அஷ்ட நாகங்கள் சிவராத்திரி வழிபாடு நடத்துவது இயல்பு. அவை சிவராத்திரி அன்று முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் வழிபடும்.

இரண்டாம் காலத்தில் இங்கே திரு நாகேஸ்வரத்திற்கு வந்து சிவபெருமானை வழிபடுகின்றன. மூன்றாவது காலத்தில் திருப்பாம்புரம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வழிபடுகின்றன பின்பு நான்காம் காலத்தில் நாகூரில் உள்ள சிவபெருமானை வழிபடுகின்றன.

நாகங்கள் வழிபட்ட ஈஸ்வரன் என்பதால் மூலவர் நாகேஸ்வரன் என்று அழைக்கப்படுகின்றார். இத்தலமும் திரு நாகேஸ்வரம் எனப்படுகின்றது. நாகங்கள் தவிர இங்கு பல ரிஷிகளும் சிவனை வழிபட்டனர். லட்சுமி, பார்வதி, சரஸ்வதி, விநாயகர் போன்ற தெய்வங்களும் இங்கு எழுந்தருளியிருக்கும் சிவனை வழிபட்டுள்ளனர்.

நீலமணி நாகராஜன் வணங்கிய திருநாகேஸ்வரம் | Thirunageswaram Temple In Tamil

மனித முகத்துடன் ராகுபகவான்

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் பெரிய பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ராகு பகவான் கோவில் உள்ளது. இங்கு அவர் மனித முகத்துடன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகத்துடன் காட்சியளிக்கின்றார். இருபுறமும் நாகவல்லி நாகராணி என்று இரு தேவியரும் உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ராகு காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது பாலாபிஷேகம் செய்யப்படும். ராகு பகவான் சிலையின் மீது ஊற்றப்படும் பால் நீல நிறத்தில் கீழே இறங்கும்.

வழிபாட்டின் பலன்

திருமணத்தடை உள்ளவர்களும் குழந்தைப் பேறு இல்லாதவர்களும் நாகநாதர் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர் .ஜாதகத்தில் ஒன்று, இரண்டு, ஏழு, எட்டு, ஐந்து, பதினோராம் இடங்களில் ராகு கேது இருப்பவர்களுக்கு திருமணத் தடையும் புத்திர தோஷமும் இருக்கும். இவர்கள் நாகநாதர் கோவிலுக்கு வந்து தொடர்ந்து வழிபாடு செய்தால் நல்ல திருமணமும் நல்ல குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

குழந்தை வரம் அருளும் அமணலிங்கேஸ்வரர்

குழந்தை வரம் அருளும் அமணலிங்கேஸ்வரர்

அனுகூல ராகு

ராகுவால் யோகம் கிடைக்கவும் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர். ஒருவர் ஜாதகத்தில் ராகு யோகமான இடத்தில் அனுகூல ராகுவாக இருந்தால் அவர் அந்நிய மொழி, அந்நிய மனிதர், அந்நிய நாட்டில் வேலை அல்லது தொழில் செய்வதன் மூலமாக . லாபம் அடைவார். இதை பரதேசி யோகம் என்பார்கள்.

அடுத்த நாட்டிற்கு போய் கல்வி பெறுவது, தொழில் செய்வது அல்லது இங்கிருந்தே அடுத்த நாட்டினருடன் ஏற்றுமதி இறக்குமதி போன்ற வாணிபத் தொடர்புகளை மேற்கொள்வது போன்ற பரதேசி யோகம் அனுகூல ராகுவால் கிடைக்கும்.

நீலமணி நாகராஜன் வணங்கிய திருநாகேஸ்வரம் | Thirunageswaram Temple In Tamil

மேலும் இக்கிரக அமைப்புடைய ஜாதகர் பிற மொழி, பிற சாதி, பிற மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்வதற்கும் இந்த அனுகூல ராகு உதவும். ராகுவைப் போல் கொடுப்பவன் இல்லை கேது வைப்போல் கெடுப்பவன் இல்லை என்று ஒரு பழமொழி ஜோதிட உலகில் வழங்குகின்றது.

ராகு அதிகளவில் உலக இன்பங்களை அள்ளி அள்ளி கொடுக்கும். சொத்து, சுகம், கார், பங்களா, பெண் சுகம் போன்றவற்றை ஏராளமாகக் கொடுத்துவிட்டுப் பின்பு அவற்றையெல்லாம் ஏமாற்றி பறித்துக் கொள்ளும். அதனால் ராகு திசையில் சிலர் தன்னுடைய தொழிலின் உச்சத்தைத் தொடுவர்.

செல்வாக்காக இருப்பர். பின்பு ராகு திசை முடிந்து குரு திசை ஆரம்பித்ததும் உலக சுகங்களால் காயப்பட்டு தெய்வ பக்தர்களாக மாறி புண்ணிய ஸ்தல யாத்திரைகளை மேற்கொள்வர். 

விழாக்கள்

திருநாகேஸ்வரம் கோவிலில் மற்ற சிவன் கோவிலில் நடப்பது போல ஆண்டுதோறும் மகாசிவராத்திரி சிறப்பாக நடைபெறும். சிவனின் பிறந்த நாளான மார்கழி திருவாதிரையும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும். பங்குனி உத்திரத் திருநாள் தெய்வத் திருமணத் திருநாளாகும். திருக்கார்த்திகையில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

முருகனின் ஏழாம் படை வீடு எங்கு இருக்கிறது தெரியுமா?

முருகனின் ஏழாம் படை வீடு எங்கு இருக்கிறது தெரியுமா?

கதை 1

இந்திரனின் ரகசியப்

பூஜை திருநாகேஸ்வரம் கோவிலிலும் மற்ற சிவன் கோவிலில் வழங்குவது போல சாபம் தீர்த்த கதைகள் உண்டு. இத்தலமும் மற்ற சிவன் கோவில்களைப் போலவே இந்திரன் சாபம் தீர்த்த தலமாகக் கருதப்படுகின்றது. அம்மனுக்கு இரவு அர்த்த ஜாம பூஜை முடிந்த பிறகு இந்திரன் சந்நிதிக்குள் வந்து அம்மனுக்குப் பிறர் எவரும் அறியாமல் ரகசியமாகப் பூஜை செய்வதாக ஐதீகம்.

இதே கதை சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோயிலிலும் சொல்லப்படும். அங்கு இரவில் வந்து இந்திரன் சிவனை வணங்குவார். அவர் கருவறைக்குள் பூஜை செய்த அடையாளங்கள் காலையில் காணப்படும். திருநாகேஸ்வரத் திருத்தலத்தில் இந்திரன் இரவில் அம்மனுக்கு பூஜை செய்ததால் அவனுக்கு சாப விமோசனம் கிடைத்தது.

நீலமணி நாகராஜன் வணங்கிய திருநாகேஸ்வரம் | Thirunageswaram Temple In Tamil

கதை 2

பிருங்கிக்குக் காட்சியளித்த தேவியர் பிருங்கி முனிவர் திருநாகேஸ்வரம் வந்து முப்பெரும் தேவியரை நோக்கி தவம் செய்தார். மூன்று தேவியரும் அவருக்குக் காட்சி அளித்தனர். பின்பு பிருங்கியின் வேண்டுகோளை ஏற்று மூவரும் இங்கேயே கோயில் கொண்டு இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கினறனர். 

கதை 3

ஏழரைச் சனி விலகிய தலம் நள மகாராஜா சூதாட்டத்தால் தன் நாட்டை இழந்து தன் மனைவி தமயந்தியுடன் காட்டுக்குச் சென்றான். அவன் வேதனையைப் புரிந்து கொண்ட தமயந்தி அவன் தன்னைத் தனியாக விட்டுவிட்டுச் சென்று விடுவானோ என்ற அச்சத்தில் தன் சேலை நுனியுடன் அவனது வேட்டி நுனியையும் சேர்த்து முடிந்து கொண்டு உறங்கினாள்.

அந்நிலையிலும், நளன், அவள் உறங்கியதும் தன்னுடைய வேட்டி நுனியை அவிழ்த்து அவள் அருகிலேயே விட்டுவிட்டுச் சென்று விட்டான். அப்படிச் சென்றவனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் வந்தது. ஒரு நாள் நளன் தன் குதிங்காலைச் சரியாக தேய்த்துக் கழுவவில்லை.

தண்ணீர் படாத அந்த குதிங்கால் பகுதியில் சனி போய் இருந்து கொண்டான். பாதச் சனியாக அமர்ந்தான். சனி பிடித்ததும் கார்கோடகன் என்ற பாம்பு அவனைத் தீண்டியது. நளனில் உருவம், நிறம் எல்லாம் கறுத்து உருமாறிவிட்டது.

விஷம் இறங்கவும் சந்திரனைத் தியானிக்கவும் திங்களூர் கோயில்

விஷம் இறங்கவும் சந்திரனைத் தியானிக்கவும் திங்களூர் கோயில்

 

அவனுடைய தேகப் பொலிவும் மறைந்தது. . மடப்பள்ளியில் சமைக்கும் சமையல்காரனைப் போல கருத்து மெலிந்து தோன்றினான். அந்த வேலை தான் அவனுக்கு ஓர் அரண்மனையில் கிடைத்தது. அவனது சமையல் அருமை கண்டு உலகமே வியந்து நளபாகம் என்று போற்றியது.

நளன் சமையல்காரனாக இருந்து ஜென்மச்சனி காலத்தில் மிகவும் துன்பப்பட்டான். சனி அடுத்த இரண்டரை ஆண்டுகளும் அவனை ஆட்டிப் படைத்தது. இத்தலத்திற்கு அவன் வந்ததும் அவனை விட்டு சனி நீங்கியது. உடனே கார்கோடகன் பாம்பும் அவனிடமிருந்து தன்னுடைய விஷத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டது.

எனவே திருநாகேஸ்வரம் திருக்கோயில் நாக விஷம் நீங்கிய இடம் என்று போற்றப்படுகிறது. இங்கே நவக்கிரக சந்நிதியோடு ராகு பகவானுக்கும் உண்டு. சனி பகவானுக்கும் தனி சந்நிதிகள் உண்டு.

நீலமணி நாகராஜன் வணங்கிய திருநாகேஸ்வரம் | Thirunageswaram Temple In Tamil

கல்லும் கட்டுமானமும்

தமிழகத்தில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டுமானக் கலைநுட்பம் பற்றி தமிழக மக்கள் அதிகமாக அறிந்து கொள்ளவில்லை. சிற்பிகள் ஏழு இசை தூண்களுக்கு ஒரு கல், மணி ஓசை கேட்பதற்கு மணிகண்டக்கல், நீர் துளிப்பதற்கு சந்திரகாந்தக்கல், நீலமாக மாறுவதற்கு நீலமணிக்கல், பச்சையாகத் தோன்றுவதற்கு மரகதக்கல் என்று பலவகைக் கற்களைக் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தினர்.

இங்கு ராகு கிரகம் செய்யப்பட்ட கல் நீலமணிக்கல் ஆகும். இதனை ஆங்கிலத்தில் (jasper) ஜஸ்பர் என்பர். Lapis lazuli என்ற கல்லும் நீல நிறத்தில் உள்ள கல் ஆகும் இக்கற்கள் சிந்து சமவெளி நாகரிக அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

ராகு மீது பால் நீலமாவது ஏன்?

பச்சை நிற மரகதக் கல்லை பாலுக்குள் வைத்தால் மரகத பச்சை ஒளி பரவி பால் பச்சையாகத் தெரியும். அது போல நீல மணி கல்லைப் பாலுக்குள் வைத்தால் நீல ஒளி பரவி பால் வெளிர் நீலமாகத் தெரியும். ராகு பகவான் மீது அபிஷேகம் செய்யப்படும் பால் நீலமணிக்கல்லின் மீது பரவி வரும் போது நீல நிற ஒளியைப் பிரதிபலிக்கின்றது.

எனவே பால் நீல நிறமாகத் தெரிகின்றது. இந் நீல நிறம் விஷத்தின் நிறம் அல்ல சிலை செய்த கல்லின் நிறம் ஆகும். தமிழகக் கோயில் கட்டுமான அறிவியல் திறனைப் பற்றிய அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பால் பொழிந்ததால் பாலமலை

பால் பொழிந்ததால் பாலமலை

நாக தெய்வங்கள்

வடநாட்டில் நாகங்களைத் தமது சமயத்திற்குள் கொண்டு வந்தவர்கள் பௌத்தர்கள் ஆவர். வடநாட்டில் நாகம் என்பது தீய சக்தி ஆகும். நாகத்தைக் கொல்லும் மயிலும் கருடனும் தெய்வ சக்தி உடையன. ஆனால் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த பூர்வீகக் குடிகள் நாகத்தைத் தமது குல முதுவர் (forefather) என்றும் குல மரபுச் சின்னம் (totem) என்றும் கருதி வழிபடு தெய்வங்களாகப் போற்றினர்.

இவர்கள் நாகர்கள் எனப்படும் இனத்தவர். குமரிக் கண்டத்தவர் அல்லது ஆப்பிரிக்க, தென்னிந்திய பகுதிகளில் வாழ்ந்த குடிகள் அனைத்தும் நாகர் எனப்பட்டனர். இவர்களின் எழுத்து நாகரி என்றும் வாழ்க்கைமுறை நாகரிகம் என்றும் அழைக்கப்பட்டது.

நாகர்கள் தம் தலையில் நாக படம் சூடினர். சமய வாதங்களில் தோற்ற பௌத்தர்களின் நாக்குகள் வெட்டப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்ட போது சைவ சமயம் புதிய எழுச்சியைக் கண்டது. அப்போது சிவன் கோயில்களில் சிவலிங்கத்துக்கு நாகாபரணம் சூட்டப்பட்டது. பூர்வ குடிகள் நாகம் சூடிய இறைவனைத் தமது கண்கண்ட கடவுளாகக் கருதினர்.  

நீலமணி நாகராஜன் வணங்கிய திருநாகேஸ்வரம் | Thirunageswaram Temple In Tamil

நாகங்களும் உறையூரும்

பௌத்தர்கள் நாகர்களை ராகு, தட்சகன், கார்க்கோடகன், ஆதிசேஷன், வாசுகி, ஆனந்தன், சங்கபலன், பதுமன் என்று அஷ்ட நாகங்களாகப் போற்றினர். தாமரை சுலோகம் போதித்த போது அஷ்ட நாகங்களும் அருகில் இருந்து கேட்டதாக பௌத்த சமய வரலாறு தெரிவிக்கின்றது.

உரக புரம் (உறையூர்) பௌத்தர்களினின் நாக நகரமாக விளங்கியது. உரகம் என்றால் நாகம். உறையூரில் ஆச்சாரிய புத்த தத்த தேரர் அபிதம்மாவதாரம் என்ற நூலை இயற்றினார் உரகபுரம் (உறையூர்) மடாலயம் பௌத்தப் பள்ளியாகத் திகழ்ந்தது.

பௌத்தர்கள் போற்றிய நாகங்கள் பின்பு வந்த புராணங்களில் குறிப்பாக பரீட்சித்து கதையில் தீயில் சாகடிக்கப்பட்டன. இவர்கள் தெய்வமாகப் போற்றிய நாகங்கள் புராணத்தில் சாபம் பெற்றவையாக சிவன் கோயில்கள் உருவான பல ஊர்களில் வந்து சாப விமோசனம் பெற்ற கதைகள் தோன்றின. 

இந்திரன் பூஜித்த தலம்

கௌதம் புத்தருக்கு ஞான ஒளி கிடைத்த போது திருமுழுக்குச் செய்த இந்திரனுக்கு பௌத்தர்கள் லிங்க பானம் (கந்து) வைத்து வழிபட்டனர். இந்திரன் இந்திரியத்தின் குறியீடாக விளங்கினான். சிலப்பதிகார. இந்திரன் கோயிலை 'கந்துடைப் பொதியில்' என்றது.

பௌத்த சமயம் தோற்கடிக்கப்பட்ட பின்பு பௌத்தர்களின் தெய்வமான இந்திரனும் சாபம் பெற்றவண் ஆனான். அவனை வழிபட்ட தலங்கள் அவனுக்கு சாபவிமோசனம் கொடுத்த சிவத்தலங்கள் ஆயின. சாப விமோசனம் பெறுவதற்காக இந்திரன் திருநாகேஸ்வரம் அம்மன் சந்நிதிக்கு இரவில் வந்து வழிபட்டுச் சென்றான். 

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில்

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில்

குபேரன் மனைவியர் சங்க நிதி, பதும நிதி

சங்கம், பத்மம் ஆகியவை பௌத்த சமயத்தின் முக்கிய கருத்தியல்கள் ஆகும். சங்க நிதி, பதும நிதி குபேரனின் மனைவியர். பௌத்த சமயத்தில் ஏழு மன்னர்களில் ஒருவனாக குபேரனை வைசிரவணன் என்று அழைப்பர். இவர் எட்டு தர்மபாலர்களில் ஒருவராவார்.

உலகெங்கும் தோளில் செல்வத்தையும் யோகத்தையும் மூட்டையாகக் கட்டி போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கும் Laughing Buddha சிலைகள் குபேரனின் சிலைகள் ஆகும்.

ஜப்பான், சீனா, திபெத் போன்ற பௌத்தம் செழித்திருக்கும் நாடுகளில் இன்றும் குபேரன் பௌத்தக் கடவுளாக வணங்கப்படுகிறான். ஜைன சமயத்தில் குபேரனை சர்வானுபகதி என்பர் 

நீலமணி நாகராஜன் வணங்கிய திருநாகேஸ்வரம் | Thirunageswaram Temple In Tamil

இந்து சமயத்தில் குபேரன்

இந்து மதத்தில் பிரம்மாவின் பேரனான விஷ்ரவனுவுக்கும் சப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாஜரின் மகள் இலவிதாவுக்கும் பிறந்தவன் குபேரன். அதே விஷ்வரவனுக்கும் அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகதிக்கும் பிறந்தவர்கள் ராவணன் கும்பகர்ணன் , சூர்ப்பநகை, விபீஷணன் ஆகியோர்.

குபேரனும் இராவணனும் ஒரு தந்தையின் பிள்ளைகள். வைணவத்தில் திருப்பதி ஏழுமலையானுக்கு கடன் உதவி செய்தவன் குபேரன் என்று ஒரு கதை உண்டு.

சைவத்தில் சிவபக்தி காரணமாக குபேரனை சிவபெருமான் சொர்ண பைரவர் ஆக்கினார் என்றொரு கதை உள்ளது. தங்கம் வைத்திருக்கும் குபேரனை வைதீகச் சமயங்கள் தங்களின் பக்தர்களுக்குக் கதை மாற்றி கொடுத்தன.  

நவ நிதி நாயகன்

மொத்தத்தில் எல்லா சமயங்களிலும் குபேரன் பத்மம், மகா பத்மம், மகரம், கச்சபம், குமுதம், நந்தம், சங்கம், நீலம், பத்மினி ஆகிய நவநிதிகளுக்கும் அதிபதி என்பது மாற்றப்படவில்லை.

கதைகள் மாற்றப்பட்டாலும் கடவுளின் இயல்பு மாற்றப்படவில்லை நாகநாதர் கோவில் ஆதியில் பௌத்த கோவிலாக இருந்தது என்பதற்கு நாக வழிபாடு, சங்கநிதி பதுமநிதி, இந்திரன் சாபம் தீர்த்த கதை, சுதை வடிவிலான அம்பாள், ராகு என்ற நாகராஜன் வழிபாடு, சண்பக வனம் (ஆராகமம்)ஆகியவை சான்றாக விளங்குகின்றன.  

சிறப்பு மாறா திருத்தலம்

திருநாகேஸ்வரத்தில் அன்று முதல் இன்று வரை விஷம் இறங்கவும் விஷக்கிருமிகளால் ஏற்படும் நோய் திறவும் கருப்பைக் கோளாறுகள் தீர்ந்து குழந்தை பிறக்கவும் சனி மற்றும் ராகு தோஷம் நீங்கவும் பக்தர்கள் வந்து வணங்கிப் பயன் பெறுகின்றனர். திருத்தலத்தின் சிறப்பு அதன் தோற்றம் முதல் இன்று வரை எவ்வித மாற்றமும் அடையவில்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.







+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US